ADDED : ஜூன் 12, 2024 12:12 AM
சொத்து பிரச்னை: பெண்ணுக்கு அரிவாள் வெட்டு
தேவதானப்பட்டி:காமக்காபட்டி மாயாண்டி தெருவைச் சேர்ந்த முருகன் மனைவி வேண்டாமணி 55. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இவரது அக்காள் மகன் பாண்டிக்கும் இடையே சொத்து பிரச்சனை இருந்து வந்தது. இந்நிலையில் குழாயில் தண்ணீர் பிடிக்க சென்ற வேண்டாமணியை, அக்கா மகள் தெய்வம், இவரது தங்கை ஈஸ்வரி ஆகியோர் தாக்கினர். இவர்களது சகோதரர் பாண்டி, அரிவாளால் வேண்டாமணியை வெட்டினார். இவர்களது மற்றொரு சகோதரி ராணி உட்பட நான்கு பேரும், வேண்டா மணிக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். தேவதானப்பட்டி போலீசார் நான் பேர் மீது வழக்கு பதிவு செய்தார்.
--வாலிபர் தற்கொலை
கம்பம்: பெண்கள் மேல்நிலைப் பள்ளி தெருவை சேர்ந்தவர் ராஜா 29, இவர் குவைத் நாட்டில் வேலை பார்த்து வந்தார். ஒரு மாத விடுமுறைக்கு வந்தவர், திரும்பி செல்லாமல் சொந்தமாக தொழில் செய்ய ஆலோசித்துள்ளார். இவரது குடும்பத்தினர் வெளிநாட்டிற்கு செல்லுமாறு வற்புறுத்தியுள்ளனர். இதனால் மனமுடைந்த ராஜா நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
இரும்பு கம்பிகள் மாயம்
மூணாறு: சைலன்ட்வாலி இடையே ரோடு சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. அதற்கு கிராம்ஸ்லாண்ட் எஸ்டேட் பகுதியில் இரும்பு கம்பிகள் உள்பட பல்வேறு பொருட்கள் வைத்திருந்தனர். அவற்றில் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான இரும்பு கம்பிகள் மாயமாகின. அது குறித்து ஒப்பந்ததாரர் போலீசில் புகார் அளித்தார். மூணாறு போலீசார் விசாரிக்கின்றனர்.
அதேபோல் கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணிக்காக நேரியமங்கலம் அருகே வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலான காட்டுமான உபகரணங்கள் கடந்த வாரம் மாயமாகின. அது தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடதக்கது.
வியாபாரிக்கு கத்திக்குத்து
தேவதானப்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன். அதே தெருவைச் சேர்ந்தவர் சந்தனக்குமார். இருவரும் பழக்கடை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கிடையே தொழில் போட்டி காரணமாக முன் விரோதம் இருந்தது. இந்நிலையில் சந்தனகுமார், இவரது உறவினர்கள் ரமேந்திரன், ராஜ்குமார், மணிகண்டன், ராணி, ராஜேஸ்வரி பாண்டிதேவி,பாண்டிபிரியா ஆகியோர் கத்தி,கம்பு ஆயுதங்களுடன் பிரபாகரன் வீட்டிற்குள் நுழைந்தனர். சந்தனக்குமார் கத்தியால் பிரபாகரனை குத்தியும், அவரது தாயாரை அடித்துள்ளார். மற்றவர்களும் அடித்து கொலை மிரட்டல் விடுத்தனர். தேவதானப்பட்டி போலீசார் சந்தனக்குமார் உட்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்தார்.
விபத்தில் இருவர் காயம்
போடி: அருகே எரணம்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் கவுசல்யா 21. இவரது கணவர் சூர்யா 25. இருவரும் அதே பகுதியில் வசிக்கும் மோகன் என்பவரின் டூவீலரில் பின் பக்கமாக உட்கார்ந்து சென்றுள்ளனர். மோகன் அதிவேகமாக ஓட்டி சென்ற போது, முன்னால் நின்று இருந்த டூவீலரின் மீது மோதாமல் இருக்க பிரேக் போட்டுள்ளார். இதில் சூர்யா, மோகன் இருவரும் தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்தனர். தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். போடி தாலுாகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
வரதட்சணை கேட்டு மனைவிக்கு அடி
தேவதானப்பட்டி:செங்குளத்துபட்டி காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மலைச்சாமி 35. இவரது மனைவி தனலட்சுமி 32. மலைச்சாமி வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்துவிட்டு தனலட்சுமியை அடித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது தாயார் பெருமாயி தூண்டுதலில் கூடுதல் வரதட்சணை கேட்டு தனலட்சுமி தலை முடியை பிடித்து இழுத்து அடித்துள்ளார். பெரியகுளம் அரசு மருத்துவமனையில் தனலட்சுமி அனுமதிக்கப்பட்டார். தேவதானப்பட்டி போலீசார் மலைச்சாமி, பெருமாயி மீது வரதட்சணை வழக்கு பதிவு செய்தனர்.