/உள்ளூர் செய்திகள்/தேனி/ குடிநீருடன் உவர்ப்பு நீர் கலந்து வினியோகிப்பதால் உடல்நலம் பாதிப்பு காமாட்சிபுரம் ஊராட்சியில் அடிப்படை வசதியின்றி தவிப்பு குடிநீருடன் உவர்ப்பு நீர் கலந்து வினியோகிப்பதால் உடல்நலம் பாதிப்பு காமாட்சிபுரம் ஊராட்சியில் அடிப்படை வசதியின்றி தவிப்பு
குடிநீருடன் உவர்ப்பு நீர் கலந்து வினியோகிப்பதால் உடல்நலம் பாதிப்பு காமாட்சிபுரம் ஊராட்சியில் அடிப்படை வசதியின்றி தவிப்பு
குடிநீருடன் உவர்ப்பு நீர் கலந்து வினியோகிப்பதால் உடல்நலம் பாதிப்பு காமாட்சிபுரம் ஊராட்சியில் அடிப்படை வசதியின்றி தவிப்பு
குடிநீருடன் உவர்ப்பு நீர் கலந்து வினியோகிப்பதால் உடல்நலம் பாதிப்பு காமாட்சிபுரம் ஊராட்சியில் அடிப்படை வசதியின்றி தவிப்பு
ADDED : ஜூன் 04, 2024 06:01 AM

சின்னமனூர் : காமாட்சிபுரம் ஊராட்சி பகுதியில் ஆற்று தண்ணீரையும், ஆழ்துளை கிணற்று நீரையும் கலந்து குடிநீராக வினியோகிப்பதால் உடல் நலம் பாதிப்படைகின்றனர்.
சின்னமனூர் ஒன்றியம் காமட்சிபுர ஊராட்சியில் 9 வார்டுகள் உள்ளன. மக்கள் தொகை 4 ஆயிரத்திற்கும் அதிகம் உள்ளது.
இவ்வூராட்சியில் அழகாபுரி, ஒடைப்பட்டி காலனி உட்கடை கிராமங்களாக உள்ளன.
ஓடைப்பட்டி காலனி, காமாட்சிபுரத்தில் இருந்து 5 கி.மீ. துாரத்தில் அமைந்துள்ளது. இங்கு 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இக் காலனியில் சேதமடைந்த கழிவு நீர் வாய்க்கால் சீரமைக்காததால் கழிவு நீர் தேங்கி நிற்கிறது.
4 குழாய்களுடன் உள்ள பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டி பழுதடைந்து பயன் இன்றி உள்ளது. காமாட்சிபுரத்தில் பெண்கள் சுகாதார வளாகம் தண்ணீர் வசதியின்றி பூட்டப்பட்டு பயன்பாடு இன்றி உள்ளது.
சீலையம்பட்டி அருகே முல்லைப் பெரியாற்றில் இருந்து பம்பிங் செய்து குடிநீர் வினியோகிக்கின்றனர். குடிநீர் வாரியம் வினியோகத்தில் குளறுபடிசெய்வதால் இங்குள்ள போர்வெல் நீரையும், ஆற்று தண்ணீரையும் கலந்து வினியோகிப்பதால் பலர் அடிக்கடி காய்ச்சல், வயிற்று போக்கால் பாதிக்கப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சேகரம் செய்யும் குப்பையை பிரித்து வாங்க ஒரே ஒரு துப்புரவு பணியாளர் உள்ளார்.
துாய்மை காவலர்கள் இருந்த போதும் சேகரம் செய்யும் பணிகள் முறையாக நடக்கவில்லை.
குடிநீர் தட்டுப்பாடு
செல்வம், காமாட்சிபுரம்: குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. தட்டுப்பாட்டை சமாளிக்க ஆற்று நீரை ஆழ்துளை கிணற்று நீருடன் கலந்து சப்ளை செய்வதால் இந்த நீரை குடிக்க முடியவில்லை.
உவர்ப்புநீரை குடிப்பதால் பலரும் சீறுநீரத்தில் கல் உருவாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். குடிநீரை சுத்திகரிப்பு செய்து வழங்க வேண்டும்.
ஒரு சில பகுதிகளில் ஒரு நாள் விட்டு ஒரு நாளும், பெரும்பாலான பகுதிகளில் 5 நாட்களுக்கு ஒரு முறை சப்ளை செய்கின்றனர்.
இதனால் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. குடிநீர் தினமும் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் பொதுமக்கள் சிகிச்சை பெற வசதியாக 'அம்மா கிளினிக்' செயல்படுத்தப்பட்டது. ஆட்சி மாறியதும் கிளினிக் மூடப்பட்டு தற்போது குப்பை வண்டி நிறுத்தும் இடமாக மாறிவிட்டது.
இதனால் மக்கள் சிறு, சிறு உடல் நல பாதிப்பிற்கு தனியார் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. அம்மா கிளினிக் செயல்படுத்த வேண்டும்.
பராமரிப்பு இல்லாத கழிப்பிடங்கள்
சோனைமுத்து, அழகாபுரி: அழகாபுரியில் பெண்களுக்கான கழிப்பறைகள் முறையாக இல்லை. இதனால் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர்.
கழிப்பிடங்களை முறையாக பராமரிக்க ஊராட்சி முன்வர வேண்டும். அழகாபுரி அங்கன்வாடி கட்டடத்தில் வாசல்படி சேதமடைந்துள்ளது.
அதை சீரமைக்க வேண்டும். வீடுதோறும் வந்து குப்பைகளை தினமும் சேகரம் செய்ய வேண்டும். ஊராட்சி அலுவலக கட்டடத்தின் வாசல்படி இடிந்துள்ளதால் அலுவலகத்திற்கு பொதுமக்கள் செல்ல சிரமமாக நிலை உள்ளது.
தட்டுப்பாடு இல்லை
ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், குடிநீர் வாரியம் தினமும் 3 லட்சம் லிட்டர் தருகிறது. குடிநீர் சப்ளையில் பிரச்னை இல்லை. பொது கழிப்பறைகள் பராமரிக்கப்படுகிறது.
ஒரே ஒரு துப்புரவு பணியாளரை வைத்து சமாளித்து வருகிறோம். விரிவாக்க பகுதிகளில் அடிப்படை வசதிகள் படிப்படியாக செய்து தரப்படும். திடக்கழிவு மேலாண்மை செயல்பட்டு வருகிறது என்றனர்.