ADDED : ஜூலை 21, 2024 08:10 AM
மூணாறு: மூணாறு அருகே கே.டி.எச்.பி., கம்பெனிக்குச் சொந்தமான பெரிய வாரை எஸ்டேட், லோயர் டிவிஷனில் புலியிடம் சிக்கி காட்டு மாடு இறந்தது.
மூணாறைச் சுற்றியுள்ள எஸ்டேட் பகுதிகளில் புலி, சிறுத்தை ஆகியவற்றிடம் சிக்கி தொழிலாளர்கள் உப வருமானத்திற்கு வளர்க்கும் பசுக்கள் ஏராளம் பலியாகி வருகின்றன. இதனிடையே புலியிடம் சிக்கி காட்டு மாடு இறந்தது.
பெரியவாரை எஸ்டேட் லோயர் டிவிஷனில் தொழிலாளர்கள் குடியிருப்பு அருகே காட்டில் உடல் பாதி தின்ற நிலையில் ஆறு வயதுடைய காட்டு மாடு இறந்து கிடந்தது. அதனை புலி தாக்கி கொன்றதாக தெரிய வந்தது. மூணாறு வனத்துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தி காட்டு மாட்டை கொன்றது புலி என்பதை உறுதி செய்தனர்.
புலி குடியிருப்பு பகுதியில் நுழைவதை கண்காணிப்பதற்கு வனத்துறை வாச்சர்கள் நான்கு பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேவைப்பட்டால் ' ட்ரோன்' கள் மூலம் புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.