ADDED : ஜூன் 15, 2024 07:04 AM

பெரியகுளம் : பெரியகுளம் கைலாசபட்டியில் நண்பர்களுடன் தனது கிணற்றில் குளிக்கும் போது விவசாயி அஜித் பாபு நீரில் மூழ்கி பலியானார்.
பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த விவசாயி அஜித்பாபு 43. இவருக்கு கைலாசப்பட்டியில் தென்னந்தோப்பு உள்ளது. இங்கு 40 அடி ஆழ கிணற்றில் ஜூன் 13ல் தனது நண்பர்கள் ரகு, ரவி ஆகியோருடன் அஜித்பாபு நீச்சல் அடித்து குளித்துக் கொண்டிருந்தார். மாலை 4:00 மணிக்கு நண்பர்கள் கிணற்றில் இருந்து மேலே ஏறி 'அஜித்து, அஜித்து' என குரல் எழுப்பியும் பதில் வரவில்லை. நண்பர்கள் மீண்டும் தண்ணீருக்குள் குதித்து தேடியும் அஜித்பாபு கிடைக்கவில்லை. பெரியகுளம் தீயணைப்பு நிலைய அலுவலர் பழனி தலைமையில் வீரர்கள் 40 வது அடியில் ஆழ நீரில் மூழ்கி இறந்த அஜித்பாபு உடலை மீட்டனர். நீந்திக் கொண்டிருக்கும் போது நெஞ்சுவலியால் அஜித் பாபு இறந்தாரா? வேறு ஏதாவது உடல்நிலை பிரச்னை காரணமா என தென்கரை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட அஜித் பாபு உடலை பார்த்து நண்பர்கள் கதறி அழுதனர்.