/உள்ளூர் செய்திகள்/தேனி/ ஜூன் 13ல் பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு குழு ஆய்வு ஜூன் 13ல் பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு குழு ஆய்வு
ஜூன் 13ல் பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு குழு ஆய்வு
ஜூன் 13ல் பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு குழு ஆய்வு
ஜூன் 13ல் பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு குழு ஆய்வு
ADDED : ஜூன் 07, 2024 07:28 PM
கூடலுார்:முல்லைப் பெரியாறு அணையில் மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் விஜய்சரண் தலைமையிலான மத்திய கண்காணிப்பு குழு ஜூன் 13 ல் ஆய்வு மேற்கொள்கிறது.
முல்லைப் பெரியாறு அணையில் நடைபெறும் பராமரிப்பு பணிகளை கண்காணிப்பதற்காக உச்சநீதிமன்ற பரிந்துரையின்படி மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் விஜய்சரண் தலைமையில் கண்காணிப்புக் குழு உள்ளது. இக்குழு ஆண்டுதோறும் அணைப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு அணையில் நடைபெற வேண்டிய பராமரிப்பு பணிகள் குறித்து ஆலோசனை வழங்கும். அதன்படி பணிகள் மேற்கொள்ளப்படும். இக்குழுவில் உறுப்பினர்களாக தமிழக அரசு சார்பில் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்ரமணியம், கேரள அரசு சார்பில் நீர்ப்பாசனதுறை கூடுதல் தலைமைச் செயலர் டாக்டர் வேணு, நீர்ப்பாசனத்துறை நிர்வாக தலைமை பொறியாளர் அலெக்ஸ் வர்கீஸ் இடம் பெற்றுள்ளனர்.
இக்குழு 2023 மார்ச் 27ல் அணையின் நீர்மட்டம் 116.75 அடியாக இருந்தபோது அணைப் பகுதியில் ஆய்வு நடத்தியது. இந்நிலையில் ஜூன் 13ல் ஆய்வு மேற்கொள்கிறது.
வழக்கமாக காலையில் அணைப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டபின் அன்றைய தினமே மாலையில் இரு மாநில அதிகாரிகள் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடக்கும். ஆனால் இந்த ஆண்டு ஜூன் 13ல் முழுமையாக ஆய்வு பணியிலும், 14ல் ஆலோசனைக் கூட்டமும் நடைபெறஉள்ளது.
கடந்த சில மாதங்களாக கேரளாவில் புதிய அணை என்ற பிரச்னை தீவிரமாகியுள்ள நிலையில் இந்த ஆய்வு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். மேலும் கேரளாவின் புதிய அணை குறித்த கருத்துக்கு தமிழகத் தரப்பு அதிகாரிகள் எதிர்ப்புகள் தெரிவிக்கும் நிலை உள்ளதால் ஆலோசனைக் கூட்டத்தில் காரசார விவாதம் இருக்கும்.