/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/ தண்ணீரைப் பெற்றுத் தர வேண்டிய தமிழக முதல்வர் வாயை மூடிக்கொண்டு உள்ளார்: பாண்டியன் வேதனை தண்ணீரைப் பெற்றுத் தர வேண்டிய தமிழக முதல்வர் வாயை மூடிக்கொண்டு உள்ளார்: பாண்டியன் வேதனை
தண்ணீரைப் பெற்றுத் தர வேண்டிய தமிழக முதல்வர் வாயை மூடிக்கொண்டு உள்ளார்: பாண்டியன் வேதனை
தண்ணீரைப் பெற்றுத் தர வேண்டிய தமிழக முதல்வர் வாயை மூடிக்கொண்டு உள்ளார்: பாண்டியன் வேதனை
தண்ணீரைப் பெற்றுத் தர வேண்டிய தமிழக முதல்வர் வாயை மூடிக்கொண்டு உள்ளார்: பாண்டியன் வேதனை
ADDED : ஜூன் 11, 2024 08:31 PM

தஞ்சாவூர்:கர்நாடகாவிடம் உரிய தண்ணீரை பெற்றுதரவும், மேகதாது அணை கட்டுமானத்தை சட்டப்படி உடன் தமிழக அரசு தடுத்து நிறுத்திடவும், ராசிமணலில் அணை கட்டுமானப்பணியை துவங்கவும் வலியுறுத்தி, தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் பொதுச்செயலாளர் பாண்டியன் தலைமையிலான, விவசாயிகள் நீதி கேட்டு பேரணி, பூம்புகாரில் துவங்கியது.
இப்பேரணி குழுவினர், தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பிரார்த்தனை செய்தனர். பிறகு, சிறப்பு யாகம் செய்த பூக்களை கல்லணை கொள்ளிடம் ஆற்று தண்ணீரில் துாவி வழிபட்டனர்.
தொடர்ந்து திருச்சி காவிரி பாலத்தில் பேரணி சென்றனர். இதில், 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். தொடர்ந்து பேரணி இன்று நிறைவு பெறுகிறது.
தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் பொதுச்செயலர் பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:
மத்திய அரசின் ஜல்சக்தி துறை இணை அமைச்சராக கர்நாடகத்தைச் சேர்ந்த சோமன்னா நியமித்து இருப்பது கண்டிக்கத்தக்கது. தற்போதைய நிலையில், கர்நாடகத்தை சேர்ந்தவருக்கு கொடுத்திருப்பதால் தென்னிந்தியாவில் ஒற்றுமையை சீர்குலைக்க பிரதமர் முடிவு செய்துள்ளார்.
எனவே சோமண்ணாவை பதவி நீக்கம் செய்து, காவிரியில் தமிழகத்திற்கான தண்ணீரை வழங்க வேண்டும். தண்ணீரைப் பெற்றுத் தர வேண்டிய காவிரி நடுவர் மன்றம் மற்றும் தமிழக முதல்வர் வாய் மூடி உள்ளனர்.
விவசாயிகளின் போராட்டத்திற்கு மதிப்பளிக்க தவறியதால் தான், விவசாயிகளின் எதிர்ப்பால் பிரதமர் மோடி தன்னாட்சி அதிகாரத்தோடு ஆட்சி அமைக்க முடியாத அளவுக்கு தோல்வியை தழுவியுள்ளார்.
பிரதமர் மோடிக்கு அண்ணன் போல செயல்படும் ஸ்டாலின், 2026ம் தேர்தலுக்குள் விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை கைவிட வேண்டும். விவசாயிகள் மீது அடக்குமுறை கையாண்டால் மோடிக்கு ஏற்பட்ட நிலை தான் முதல்வர் ஸ்டாலின் உங்களுக்கும் நேரிடும்.
நதிநீர் இணைப்பு என்ற பெயரில், தற்போது வந்து கொண்டிருக்கும் தண்ணீர் தடைபடக்கூடாது, உரிமைகள் பாதிக்ககூடாது, உடனடி பிரச்சனையான நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:
கர்நாடக அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் உள்ளது. தமிழகத்திற்கு தண்ணீர் தராததால் கருகிய பயிர்களுக்காக 1 லட்சம் கோடி இழப்பீடு கர்நாடகா அரசிடம் இருந்து பெற்றுத் தர தமிழக முதல்வர் ஏன் முனைப்பு காட்டவில்லை.
விவசாயிகள் கடன்களை தள்ளுபடி, விவசாயிகளுக்கு பென்ஷன் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து விவசாய சங்கங்களையும் ஒன்றிணைத்து பார்லிமென்ட் முன்பு மாபெரும் போராட்டம் நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.