Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/ கோவிலுக்கு பாத யாத்திரை சென்றவர்கள் மீது வேன் மோதல் ஒரே கிராமத்தை சேர்ந்த 4 பெண்கள் உட்பட ஐந்து பேர் பலி

கோவிலுக்கு பாத யாத்திரை சென்றவர்கள் மீது வேன் மோதல் ஒரே கிராமத்தை சேர்ந்த 4 பெண்கள் உட்பட ஐந்து பேர் பலி

கோவிலுக்கு பாத யாத்திரை சென்றவர்கள் மீது வேன் மோதல் ஒரே கிராமத்தை சேர்ந்த 4 பெண்கள் உட்பட ஐந்து பேர் பலி

கோவிலுக்கு பாத யாத்திரை சென்றவர்கள் மீது வேன் மோதல் ஒரே கிராமத்தை சேர்ந்த 4 பெண்கள் உட்பட ஐந்து பேர் பலி

ADDED : ஜூலை 17, 2024 09:16 PM


Google News
Latest Tamil News
தஞ்சாவூர்:புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே கண்ணுக்குடிப்பட்டி கிராமத்தை சேர்ந்த பலரும், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு, ஆண்டுதோறும் விரதம் இருந்து, ஆடி பிறப்பை முன்னிட்டு, பாத யாத்திரையாக செல்வது வழக்கம். நேற்று அதிகாலை, 85 பேர் பாத யாத்திரையாக ஊரில் இருந்து புறப்பட்டு, தனித்தனி குழுவாக சென்று கொண்டிருந்தனர்.

நேற்று அதிகாலை 5:00 மணிக்கு, திருச்சி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில், தஞ்சாவூர் மாவட்டம் வளப்பக்குடி பகுதியில் சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, கரூரில் இருந்து, தஞ்சாவூரில் உள்ள கடைகளுக்கு அரிசி மூட்டைகளை இறக்கி விட்டு, மீண்டும் கரூருக்கு திரும்பி கொண்டிருந்த வேன், நடந்து சென்றவர்கள் மீது அடுத்தடுத்து மோதி துாக்கி வீசியபடி, வேகமாக சென்றது.

திடீரென வேன் மோதியதால், அதில் சிக்கிய பலரும் அலறினர். வேனை ஓட்டி வந்த கரூரை சேர்ந்த சவுந்தரராஜன்,38, வாகனத்தை நிறுத்தி, தப்பியோட முயன்றார். அவரை, அங்கிருந்தவர்கள் பிடித்தனர்.

பாத யாத்திரையை சென்ற பலரும், ரத்த வெள்ளத்தில் கிடந்தவர்களை பார்த்து அழுது புலம்பினர். கண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தில், கண்ணுக்குடிப்பட்டியை சேர்ந்த முத்துசாமி, 60, ராணி, 37, மோகனா, 28, மீனா, 26, ஆகிய நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே, உடல் நசுங்கி இறந்தனர்.

படுகாயங்களுடன் கிடந்த தனலட்சுமி, 37, சங்கீதா, 21, ஆகியோரை தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு, அங்கிருந்த வாகனங்களில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

தகவலறிந்து வந்த செங்கிப்பட்டி போலீசார் டிரைவர் சவுந்தரராஜனையும், அவரின் வேனையும் மீட்டனர். இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். சிகிச்சை பெற்ற தனலட்சுமி, சிகிச்சை பலனின்றி இறந்தார். சங்கீதா சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தை ஏற்படுத்திய, டிரைவர் சவுந்தர்ராஜன் கைது செய்யப்பட்டார்.

விபத்தில் இறந்தவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு, தலா 2 லட்சம், காயடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கரூரில் உள்ள அரிசி மண்டியில் இருந்து, தஞ்சாவூர் உட்பட பல இடங்களுக்கு அரிசி மூட்டைகளை இறக்கி விட்டு, மீண்டும் கரூருக்கு சென்று கொண்டு இருந்தேன். தொடர்ந்து வாகனத்தை இயக்கியதால் ஏற்பட்ட பணிச்சுமை, உடல் சோர்வால் துாக்கி விட்டேன். இதனால், வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் சென்றவர்கள் மீது மோதி விட்டது.

- வேன் டிரைவர் சவுந்தரராஜன்



10 அடி இடைவெளியில், தனித்தனி குழுவாக நடந்து சென்று கொண்டிருந்தோம். கடைசியாக நடந்து வந்தவர்கள் மீது, பின்னால், வாகனம் திடீரென மோதியது. என் மீதும் மோத வந்த போது நான் சுதாரித்து தப்பினேன். இறந்தவர்களில் பலருக்கு, கைக்குழந்தைகள் உள்ளன. துாங்கியதால் தான் விபத்து நடந்ததாக டிரைவர் கூறுகிறார். துாக்கம் வந்தால் ஓரமாக நிறுத்தி, துாங்கி சென்று இருக்கலாமே!

- விபத்தில் இருந்து தப்பிய புண்ணியமூர்த்தி



நாங்கள் சாலையோரமாக நடந்து சென்று கொண்டு இருந்தோம். நான் கொஞ்சம் முன்னாடி நடந்து சென்று கொண்டு இருந்த போது, பின்னால் பயங்கர சத்தம் கேட்டது. வேன் மோதியதில் பலரும் புதர்களில் துாக்கி வீசப்பட்டு கிடந்தனர். இறந்த பெண்களுக்கு, சின்னச்சின்ன குழந்தைகள் உள்ளன. அந்த குழந்தைகளை எப்படி வளர்க்க போகிறோம் என தெரியவில்லை. அரசு எங்கள் குழந்தைகள் வாழ வழிக்காட்ட வேண்டும்.

- உறவினர்களில் ஒருவரான ரங்கசாமி







      Our Apps Available On




      Dinamalar

      Follow us