/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/ 1,000 ஏரி, குளங்களை துார் வார இலக்கு; கடைமடை ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம் முயற்சி 1,000 ஏரி, குளங்களை துார் வார இலக்கு; கடைமடை ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம் முயற்சி
1,000 ஏரி, குளங்களை துார் வார இலக்கு; கடைமடை ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம் முயற்சி
1,000 ஏரி, குளங்களை துார் வார இலக்கு; கடைமடை ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம் முயற்சி
1,000 ஏரி, குளங்களை துார் வார இலக்கு; கடைமடை ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம் முயற்சி
ADDED : ஜூன் 23, 2024 11:23 PM

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி கடைமடை பகுதியில், நீரின் தேவையை உணர்ந்த பேராவூரணியை சேர்ந்த இளைஞர்கள், விவசாயிகள் ஒன்றிணைந்து, கடைமடை பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம் என்ற அமைப்பை, 2019ல் துவங்கினர்.
முதற்கட்டமாக பேராவூரணி பெரிய குளம், ஏரியை துார் வார முடிவு செய்து நிதி திரட்டினர்.
சிறுவர்கள் உண்டியல் சேமிப்புகள் முதல் கூலி வேலைக்கு செல்லும் நபர்கள், தொழிலதிபர்கள், பொதுமக்கள் என, பலரும் அளித்த 24 லட்சம் ரூபாய் நிதியில் ஏரியை துார் வாரி, குறுங்காடுகள் அமைத்தனர்.
அந்தாண்டு பெய்த மழையால் ஏரியில் தண்ணீர் தேங்கி, பேராவூரணியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது.
இதையடுத்து, பலரும், அந்த அமைப்பை சேர்ந்த இளைஞர்களுக்கு ஊக்கம் அளித்து, நீர்நிலைகளை துார் வார பல்வேறு கிராமங்களுக்கும் அழைத்தனர்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களில், 2022க்குள் 100 நீர்நிலைகளையும், இந்தாண்டு 200வது நீர்நிலைகளையும் துார் வாரி முடித்துள்ளனர். அமைப்பின் செயல்படுகளை பலரும் பாராட்டி வருகின்றனர்.
அமைப்பின் தலைவர் கார்த்திகேயன் கூறியதாவது: எங்கள் அமைப்பில் 436 உறுப்பினர்கள், 75 வாழ்நாள் உறுப்பினர்கள் உள்ளனர். முதற்கட்டமாக நிதி திரட்டி, பேராவூரணி பெரியகுளம் ஏரியை துார்வாரி வெற்றி கண்டோம். எங்கள் பணியை பார்த்து, 'மில்க் மெய்டு' நிறுவனம், கனரக இயந்திரம் ஒன்றை வாங்கிக் கொடுத்து உள்ளது.
கிராம மக்களையும், இளைஞர்களையும் ஒன்றிணைந்து மக்கள் இயக்கமாக மாற்றி அவர்கள் பங்களிப்போடு, ஏரியை முழுமையாக அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி துார் வாரும் பணிகளை செய்கிறோம்.
ஐந்தாண்டுகளில், ஏழு மாவட்டங்களில், 200 நீர்நிலைகளை சீரமைத்து, 4 லட்சம் பனை விதைகளை விதைத்து, 35க்கும் மேற்பட்ட குறுங்காடுகளை அமைத்துள்ளோம். 20 கிராமங்களில், 366 ஏக்கர் கருவேல மரங்களை அகற்றியுள்ளோம். இன்னும், 1,000 ஏரி, குளங்களை துார் வார இலக்கு நிர்ணயித்து பயணிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.