/உள்ளூர் செய்திகள்/தென்காசி/சங்கரன்கோவிலில் ஆடித்தபசு; ஏராளமான பக்தர்கள் தரிசனம்சங்கரன்கோவிலில் ஆடித்தபசு; ஏராளமான பக்தர்கள் தரிசனம்
சங்கரன்கோவிலில் ஆடித்தபசு; ஏராளமான பக்தர்கள் தரிசனம்
சங்கரன்கோவிலில் ஆடித்தபசு; ஏராளமான பக்தர்கள் தரிசனம்
சங்கரன்கோவிலில் ஆடித்தபசு; ஏராளமான பக்தர்கள் தரிசனம்
ADDED : ஜூலை 22, 2024 01:01 AM

தென்காசி : தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித்தபசு காட்சி நேற்று மாலை நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இக்கோயிலில் சிவனும் ஹரியும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்தும் வகையில் ஆண்டுதோறும் ஆடித்தபசு விழா நடக்கிறது. இந்தாண்டு விழா ஜூலை 11 காலையில் கோமதி அம்மன் சன்னதியில் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா 12 நாட்கள் நடக்கிறது. தினமும் கோமதி அம்மன் பல்வேறு அலங்காரங்களில் வீதி உலா வந்தார். தினமும் மண்டகப் படி விழா நடந்தது.
ஜூலை 19ல் தேரோட்டம் நடந்தது. நேற்று முக்கிய நிகழ்வான ஆடித்தபசு காட்சி நேற்று மாலை தெற்குரதவீதியில் நடந்தது. தபசு கோலத்தில் இருந்த கோமதி அம்மனுக்கு, சங்கரலிங்கசுவாமி, சங்கரநாராயண சுவாமியாக காட்சி தரும் தபசு காட்சி நடந்தது. தொடர்ந்து அம்மன், சுவாமியை வலம் வந்தார்.
உயர்நீதிமன்றம் நீதிபதி புகழேந்தி, எம்.எல்.ஏ., ராஜா, நகராட்சி தலைவி உமா மகேஸ்வரி, ஹிந்து அறநிலையத்துறை இணை கமிஷனர் அன்புமணி, எஸ்.பி., சுரேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இரவு 11:45 மணிக்கு சங்கரலிங்கசுவாமி யானை வாகனத்தில் எழுந்தருளினார். ஏற்பாடுகளை ஹிந்து அறநிலைத்துறையினர், மண்டகப்படித்தாரர்கள் செய்தனர்.