/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/எச்சரிக்கை: அனுமதியில்லாத மஞ்சுவிரட்டு நடத்துவோருக்கு உயிரிழப்பு ஏற்பட்டால் அமைப்பாளர் மீது வழக்குஎச்சரிக்கை: அனுமதியில்லாத மஞ்சுவிரட்டு நடத்துவோருக்கு உயிரிழப்பு ஏற்பட்டால் அமைப்பாளர் மீது வழக்கு
எச்சரிக்கை: அனுமதியில்லாத மஞ்சுவிரட்டு நடத்துவோருக்கு உயிரிழப்பு ஏற்பட்டால் அமைப்பாளர் மீது வழக்கு
எச்சரிக்கை: அனுமதியில்லாத மஞ்சுவிரட்டு நடத்துவோருக்கு உயிரிழப்பு ஏற்பட்டால் அமைப்பாளர் மீது வழக்கு
எச்சரிக்கை: அனுமதியில்லாத மஞ்சுவிரட்டு நடத்துவோருக்கு உயிரிழப்பு ஏற்பட்டால் அமைப்பாளர் மீது வழக்கு
UPDATED : ஜன 03, 2024 07:33 AM
ADDED : ஜன 03, 2024 06:18 AM

திருப்புத்துார்: சிவகங்கை மாவட்டத்தில் அனுமதி பெற்ற மஞ்சுவிரட்டுக்கு மட்டுமின்றி அனுமதியின்றி நடத்தப்படும் மஞ்சுவிரட்டுக்கும் போலீசார் விதிமுறைகளை ஏற்படுத்தியுள்ளனர்.மஞ்சுவிரட்டில் உயிரிழப்பு ஏற்பாட்டால் கொலை வழக்கு பதிவு செய்யப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 338 இடங்களில் மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டுள்ளது.அதில் அனுமதி பெற்ற மஞ்சுவிரட்டு 30 இடங்களில் மட்டுமே. அனுமதியின்றி 308 இடங்களில் நடைபெற்றள்ளது.
பொறுப்பாளர் மீது வழக்கு:
பாரம்பரியம் காரணமாக நடத்தப்படுவதால் அரசு தரப்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. சாதாரண வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டது. அண்மையில் வடமாடு போட்டியில் ஒருவர் இறந்ததால் நடத்தியவர் மீது கொலை வழக்கு பதிவாகி கைது செய்யப்பட்டார். இந்த ஆண்டும் கடந்த ஆண்டைப் போலவே பரவலாக அனுமதியில்லாமல் கிராமங்களில் மஞ்சுவிரட்டு நடத்தப்படும் நிலையில் கடந்த மாதம் மாவட்ட போலீஸ் நிர்வாகம் சில கட்டுப்பாடுகளை அனுமதியில்லாத மஞ்சுவிரட்டுகளுக்கு விதித்துள்ளது.
உள்ளூர் போலீசார் மூலம் அதை கடைபிடிக்க அறிவுறுத்தியுள்ளது.
கட்டுப்பாடுகள்:
அனுமதியின்றி நடத்தப்படும் மஞ்சுவிரட்டில் உள்ளூர் மாடுகள் மட்டுமே பங்கேற்க வேண்டும். பிற பகுதிகளிலிருந்து காளைகளை அனுமதிக்க கூடாது. மேலும் முதலுதவி சிகிச்சைக்கான மருத்துவக்குழு, ஆம்புலன்ஸ் வசதி, ஒலிபெருக்கியுடன் அறிவிப்பு வாகனம், தன்னார்வலர்கள் மூலம் பாதுகாப்புக்குழு ஏற்படுத்த வேண்டும். திறந்த வெளி வாகனம் மூலம் பார்வையாளர்களுக்கு உயிர் சேதம் ஏற்படும் என்பதை எச்சரிக்கை செய்ய வேண்டும். அரசு அனுமதியில்லாத இடங்களில் மீறி நடத்தப்படும் மஞ்சுவிரட்டுகளில் உயிர்சேதம் ஏற்பட்டால் பொறுப்பாளர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்படும். இப்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வசதிகளை கண்காணிக்க வேண்டும்:
மேலும் மஞ்சுவிரட்டுக்கு ஒரு வாரத்திற்கு முன்பே வருவாய்த்துறையிடம் அனுமதி பெற வேண்டும். மாடு பிடி வீரர்களுக்கு காப்பீடு செய்ய வேண்டும். காளைகள் இருக்கும் பகுதியில் முழுமையாக கண்காணிப்பு கேமிரா மூலம் வீடியோ பதிவிட வசதி செய்ய வேண்டும். காளைகளுக்கு திறனை மேம்படுத்த ஊக்கமருந்தோ, செயற்கை ஊக்கியோ கொடுத்துள்ளனரா என்பதை பரிசோதனை செய்ய கால்நடைத்துறையினர் குழு இருக்க வேண்டும். பார்வையாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வசதிகள், அமர்ந்திருக்க உரிய வசதி, தொழுவிலிருந்து காளைகள் ஓடிவரும் பகுதியில் இரு புற தடுப்புகள், அவசரகால வாகனங்கள், பார்வையாளர்கள் செல்ல வ ழி ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு போலீசார் மஞ்சுவிரட்டு ஏற்பாட்டாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.
விதிமுறைகளுக்கு எதிர்ப்பு:
மஞ்சுவிரட்டு பாதுகாப்பு பேரவை தலைவர் ஆறுமுகம் கூறுகையில்,‛ மாட்டு பொங்கல் என்றாலே எல்ல ஊர்களிலும் காளைகள் அவிழ்ப்பு விழா நடைபெறும். இந்நிலையில் காளை விளையாட்டுக்களை தடை செய்ய பீடா அமைப்பினர் கோர்ட் சென்றனர். கோர்ட்டில் தடை விதிக்காமல் வரையறைகளுடன் நடத்த அறிவுறுத்தியது. குறிப்பாக மஞ்சுவிரட்டிற்கு என்று தடையேதும் இல்லை. ஆனால் மாநில அரசு எல்லா காளை விளையாட்டுக்களையும் ஜல்லிக்கட்டு வரையறைக்குள் கொண்டு வந்து விட்டது. தற்போது அரசிதழில் அனுமதி பெற்ற மஞ்சுவிரட்டுகளும் ஜல்லிக்கட்டு பாணியில் நடக்கிறது. மஞ்சுவிரட்டு பாணியில் நடத்தாததால் நாட்டு மாடுகள் இன விருத்தி செய்யும் வாய்ப்பு வெகுவாக குறைந்து விட்டது. வடமாடு மஞ்சுவிரட்டுக்கு அனுமதியுள்ளது. இதனால் பாரம்பரியமாக கிராமங்களில் கட்டப்பட்டுள்ள தொழுக்களிலிருந்து காளைகளை அவிழ்த்து பாரம்பரிய முறையில் மஞ்சுவிரட்டு நடத்த அரசு அனுமதிக்க கோரி வருகிறோம். தற்போது அனுமதியில்லாத மஞ்சுவிரட்டுக்களுக்கு பல விதிமுறைகள் அறிவித்துள்ளது நடைமுறைக்கு ஏற்றதல்ல. அரசின் தலையீடின்றி பல நுாற்றாண்டுகளாக மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டுள்ளது.' என்றார்.
போலீசார் கூறுகையில், ‛ தற்போது எந்தவித பாரம்பரியம் இன்றியும் அதிகமான மஞ்சுவிரட்டு நடத்தப்படுகின்றன. சமூக ஊடகங்கள் மூலம் அறிவிக்கப்பட்டு திடீரென்று நடத்தப்படுகிறது. எந்த வித பாதுகாப்புமில்லாத வயல் வெளிகளில் திடீரென்று பார்வையாளர்கள் பாதுகாப்பின்றி நிற்கும் இடத்தில் காளைகள் அவிழ்ப்பதும், இதனால் பார்வையாளர்கள் காயமடைவதையும் தவிர்க்க இந்த வழிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. போலீஸ் ஆய்வாளர் ஒருவரே படுகாயம் அடைந்தார். இதனைத் தவிர்க்கவே கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மஞ்சுவிரட்டு அரசின் அனுமதியில்லாமல் நடத்தவே கூடாது' என்றனர்.