/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/மானாமதுரை நகராட்சியிலும் கமிஷனர் பணியிடம் காலி: நகரமைப்பு பணியாளரும் இல்லாததால் வளர்ச்சி பணி கேள்விக்குறிமானாமதுரை நகராட்சியிலும் கமிஷனர் பணியிடம் காலி: நகரமைப்பு பணியாளரும் இல்லாததால் வளர்ச்சி பணி கேள்விக்குறி
மானாமதுரை நகராட்சியிலும் கமிஷனர் பணியிடம் காலி: நகரமைப்பு பணியாளரும் இல்லாததால் வளர்ச்சி பணி கேள்விக்குறி
மானாமதுரை நகராட்சியிலும் கமிஷனர் பணியிடம் காலி: நகரமைப்பு பணியாளரும் இல்லாததால் வளர்ச்சி பணி கேள்விக்குறி
மானாமதுரை நகராட்சியிலும் கமிஷனர் பணியிடம் காலி: நகரமைப்பு பணியாளரும் இல்லாததால் வளர்ச்சி பணி கேள்விக்குறி
UPDATED : செப் 16, 2025 05:40 AM
ADDED : செப் 16, 2025 04:17 AM

மானாமதுரை: மானாமதுரை நகராட்சியில் 3 மாதங்களுக்கும் மேலாக கமிஷனர் பணியிடம், நகரமைப்பு அலுவலர், சர்வேயர் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளது. பொதுமக்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மானாமதுரை பேரூராட்சி 4 வருடங்களுக்கு முன்பு நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. பேரூராட்சியாக இருந்த போது இருந்த 18 வார்டுகளையே தற்போது 27 வார்டுகளாக மாற்றி உள்ளனர்.
நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட போது பேரூராட்சி பகுதிகளை ஒட்டியிருந்த கிராம ஊராட்சிகளை நகராட்சியோடு இணைக்கப்படும் என தெரிவித்த நிலையில் தற்போது வரை இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
3 மாதங்களுக்கு முன்பு இங்கு கமிஷனராக இருந்த ஆறுமுகம் பணி ஓய்வு பெற்றதை தொடர்ந்து தற்போது வரை புதிய நகராட்சி கமிஷனர் நியமனம் செய்யப்படாமல் உள்ளது. மேலுார் நகராட்சி கமிஷனர் கிருஷ்ணவேணி கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார்.
தற்போது மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.70 கோடிக்கும் மேற்பட்ட செலவில் புதிய குடிநீர் திட்டம், தார் மற்றும் சிமென்ட் ரோடு, கழிவுநீர் வாய்க்கால் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.
கமிஷனர் பணியிடம் காலியாக உள்ளதால் இப்பணிகளை முறையாக கவனிக்க ஊழியர்கள் இல்லாமல் ஆங்காங்கே பணிகள் தரம் குறைந்தும், தாமதம் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
நகராட்சி தரம் உயர்த்தப்பட்டதிலிருந்து நகரமைப்பு அலுவலர் பணியிடமும் காலியாக உள்ளதால் வீடு கட்டுபவர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள், பொறியாளர்கள் பிளான் அப்ரூவல் பெற மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். சர்வேயர் பணியிடமும் காலியாக உள்ளதால் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாத நிலை நீடிக்கிறது.
பல்வேறு பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்த ஒப்பந்ததாரர்களுக்கு உரிய நேரத்தில் பணம் கிடைக்காததால் தொடர்ந்து பணிகளை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
புதுத்தெரு ராமலிங்கம் கூறியதாவது: மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் புதிய குடிநீர் திட்டத்திற்காக ரோடுகளை தோண்டி 2 மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் புதியதாக ரோடு அமைக்காததால் பொதுமக்கள் மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர்.
நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் உள்ள அனைத்து தெருக்களிலும் இதே நிலை உள்ளது. தற்போது மழைக்காலம் துவங்கி உள்ளதால் ஆங்காங்கே மழை நீர் தேங்கி குண்டும் குழியுமாக மாறி விட்டதால் நோயாளிகள் மற்றும் முதியவர்கள், கர்ப்பிணிகள் அவதிக்குள்ளாகி வருவது குறித்து நகராட்சி அலுவலகத்தில் தெரிவித்தும் இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை,என்றார்.