/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கோவிலுக்கு வந்த பக்தை நகை திருட்டு விசாரணையில் கோவில் ஊழியர் இறப்பு கோவிலுக்கு வந்த பக்தை நகை திருட்டு விசாரணையில் கோவில் ஊழியர் இறப்பு
கோவிலுக்கு வந்த பக்தை நகை திருட்டு விசாரணையில் கோவில் ஊழியர் இறப்பு
கோவிலுக்கு வந்த பக்தை நகை திருட்டு விசாரணையில் கோவில் ஊழியர் இறப்பு
கோவிலுக்கு வந்த பக்தை நகை திருட்டு விசாரணையில் கோவில் ஊழியர் இறப்பு
ADDED : ஜூன் 29, 2025 02:04 AM

திருப்புவனம்:மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு வந்த பக்தர் காரில், 10 சவரன் தங்க நகைகள் மாயமான விவகாரத்தில், போலீசார் விசாரணையின் போது கோவில் தற்காலிக ஊழியர் இறந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு நேற்று முன்தினம், மதுரை திருமங்கலத்தை சேர்ந்த சிவகாமி, 76, தன் மகளுடன் தரிசனம் செய்ய வந்திருந்தார். சிவகாமியால் நடக்க முடியாத நிலையில், கோவில் தற்காலிக ஊழியர் அஜித், 29, 'வீல்சேர்' கொண்டு வந்து கொடுத்துள்ளார்.
அப்போது, கார் சாவியை அஜித்திடம் கொடுத்த சிவகாமி, காரை பார்க்கிங் செய்யுமாறு கூறினர். அஜித்திற்கு கார் ஓட்ட தெரியாததால், அருகில் இருந்தவருடன் காரை பார்க்கிங் செய்து, சாவியை திரும்ப அவரிடம் கொடுத்துள்ளார்.
பின், தரிசனம் முடிந்து சிவகாமி, அவரது மகள் காரில் புறப்பட்டனர். அப்போது, பின் சீட்டில் கட்டைப்பையில் வைத்திருந்த 10 சவரன் நகைகள் மாயமாகியிருந்ததை பார்த்து இருவரும் அதிர்ச்சியடைந்தனர்.
சிவகாமி, இதுகுறித்து அஜித்திடம் விசாரித்த போது, அவரிடம் உரிய பதில் இல்லை.
சிவகாமி புகாரின்படி, திருப்புவனம் போலீசார், அஜித் உள்ளிட்ட சிலரிடம் நேற்று கோவில் அருகே வைத்து விசாரித்தனர். அஜித்திடம் விசாரித்துக் கொண்டிருந்த போது, திடீரென அவர் மயங்கி விழுந்தார்.
திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அவர் இறந்தது தெரியவந்தது. இதையடுத்து, அஜித் உடல் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.