/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/பாழாகிறது: காரைக்குடி சம்பை ஊற்று கழிவுகளால்...: நிலத்தடி நீரை ஆய்வு செய்தும் பலனில்லைபாழாகிறது: காரைக்குடி சம்பை ஊற்று கழிவுகளால்...: நிலத்தடி நீரை ஆய்வு செய்தும் பலனில்லை
பாழாகிறது: காரைக்குடி சம்பை ஊற்று கழிவுகளால்...: நிலத்தடி நீரை ஆய்வு செய்தும் பலனில்லை
பாழாகிறது: காரைக்குடி சம்பை ஊற்று கழிவுகளால்...: நிலத்தடி நீரை ஆய்வு செய்தும் பலனில்லை
பாழாகிறது: காரைக்குடி சம்பை ஊற்று கழிவுகளால்...: நிலத்தடி நீரை ஆய்வு செய்தும் பலனில்லை
ADDED : ஜூலை 04, 2025 02:56 AM

காரைக்குடி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே சம்பை ஊற்று அமைந்துள்ளது.ஆண்டு முழுவதும் வற்றாமல் குடிநீரை வழங்கி வருகிறது. ஊற்றை சுற்றி 200 மீட்டர் சுற்றளவில் எங்கு மழை பெய்தாலும் அந்த தண்ணீர் நேரடியாக சம்பை ஊற்றுக்கு வந்தடையும்.
மாநகராட்சி சார்பில் இந்த ஊற்றில் 13 ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 1 லட்சத்து 40 ஆயிரம் குடும்பத்திற்கு 1 கோடியே 20 லட்சம் லிட்டர் தண்ணீர் தினமும் விநியோகம் செய்யப்படுகிறது.
பெருகி வரும் ஆக்கிரமிப்பு
சுவை மிகுந்த, சுத்தமான குடிநீராக இருந்த சம்பை ஊற்று இன்று கழிவுநீர் கலப்பு, ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல காரணங்களால் பாழாகி வருகிறது.
சம்பை ஊற்றின் அருகில் வீடுகள் கட்டவோ, கழிப்பறை கட்டவோ, நீர் உறிஞ்சும் நிலையங்கள் அமைக்கவோ கூடாது என அறிவிக்கப்பட்டிருந்தும், நாளுக்கு நாள் புதிய கட்டடங்கள், வாட்டர் வாஷ் கம்பெனிகள், கார் சர்வீஸ் சென்டர்கள், நீர் உறிஞ்சும் நிலையங்கள் புற்றீசல் போல பெருகி வருகிறது. இதனை தடுக்க பொதுமக்கள் சமூக அலுவலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
ஒவ்வொரு தேர்தலின் போதும் சம்பை ஊற்றைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, பலரும் தேர்தல் வாக்குறுதிகளாக தெரிவிக்கின்றனர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சம்பை ஊற்றின் தரத்தை அறிய, ஆய்வுக்கு அனுப்பியதாக அவ்வப்போது தகவல் வந்தாலும் இதுவரை எந்த ஆய்வு முடிவும் வெளியிடப்படவில்லை.
இதே நிலை தொடர்ந்தால் அடுத்த தலைமுறைக்கு, சம்பை ஊற்று என்ற ஒன்று இருந்ததற்கான சுவடே இல்லாமல் போய்விடும்.
சம்பை ஊற்று பாதுகாப்பு குழு தலைவர் வேணுகோபால் கூறுகையில்: சம்பைஊற்றை பாதுகாக்க, பல போராட்டங்கள், சாலை மறியல் நடத்தியுள்ளோம், 10க்கும் மேற்பட்ட வழக்குகளை சந்தித்துள்ளோம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, பெங்களூருவில் இருந்து வந்த நிலத்தடி நீர் ஆய்வுக்குழு சம்பை ஊற்றை ஆய்வு செய்தது. அது தொடர்பாக, 44 பக்க அறிக்கை வழங்கினர். அதில், ஊற்றில் 170 அடி வரை சிலிக்கான் கழிவு கலந்து குடிநீர் மாசடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆனாலும் சம்பை ஊற்றை பாதுகாக்க இதுவரை இந்த நடவடிக்கையும் இல்லை. ஆயில் கழிவுகளை வெளியேற்றும், அரசு போக்குவரத்து பணிமனை உட்பட அனைத்து நிறுவனங்களையும் வெளியேற்றுவதோடு, அதிக தண்ணீர் உறிஞ்சக்கூடிய மண்ணின் தரத்தை கெடுக்கக்கூடிய ஆலைகள் நிறுவனங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்போது தடுத்தால் தான், அடுத்த 50 ஆண்டுக்குள் குடிநீரை சுத்திகரிக்க முடியும் என்று, ஆய்வு செய்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
மாநகராட்சி கமிஷனர் சங்கரன் கூறுகையில்:
புதிதாக பொறுப்பேற்றுள்ளேன். இதுவரை யாரும் சம்பை ஊற்று குறித்து புகார் அளிக்கவில்லை. சம்பை ஊற்று குறித்து ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.