Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/அரிசி மூடை எடை குறைவால் ரேஷன் ஊழியர்கள் புலம்பல்: தராசுடன் புளூடூத் இணைப்பால் முதலுக்கே மோசம்

அரிசி மூடை எடை குறைவால் ரேஷன் ஊழியர்கள் புலம்பல்: தராசுடன் புளூடூத் இணைப்பால் முதலுக்கே மோசம்

அரிசி மூடை எடை குறைவால் ரேஷன் ஊழியர்கள் புலம்பல்: தராசுடன் புளூடூத் இணைப்பால் முதலுக்கே மோசம்

அரிசி மூடை எடை குறைவால் ரேஷன் ஊழியர்கள் புலம்பல்: தராசுடன் புளூடூத் இணைப்பால் முதலுக்கே மோசம்

ADDED : ஜூன் 07, 2025 12:23 AM


Google News
Latest Tamil News
தமிழகத்தில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ள நிலையில் 1.96 கோடி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். பல கடைகளில் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்டவற்றில் ஊழியர்கள் எடை குறைப்பு செய்வதாக தொடர்ந்து புகார் வந்தது.

இந்த எடை குறைப்பு மோசடியை தடுக்கும் விதமாக பி.ஓ.எஸ்., கருவியுடன் எடை மிஷின், புளூடூத் மூலம் இணைக்கப்பட்டது.

இதன் மூலம் எடையிடப்படும் பொருட்களின் அளவு பி.ஓ.எஸ்., கருவியில் பதிவாகும். குறைவாக போட்டால் அட்டைதாரரின் அலைபேசிக்கு குறைந்த அளவு அரிசி வழங்கப்பட்டதாகவே காட்டும். இத்திட்டம் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.

ஆனால் சில ஊழியர்கள் எடை குறைப்பு மூலம் மோசடிகளை நிறைவேற்றி வந்த நிலையில், தற்போது இந்த புளூடூத் முறை, ஊழியர்களுக்கு முதலுக்கே மோசம் என்ற நிலையை ஏற்படுத்தி உள்ளது.

ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் 50 கிலோ அரிசி சிப்பத்தில் பெரும்பாலும் 46 முதல் 47 கிலோ வரை மட்டுமே இருப்பதாக கடைக்காரர்கள் புலம்புகின்றனர். குறிப்பாக சிங்கம்புணரி தாலுகாவில் அனைத்து கடைகளுக்கும் இதே எடை குறைவோடு தான் அரிசி மூடை அனுப்பப்படுகிறது.

கோடவுனில் இருந்து ரேஷன் கடைகளுக்கு செல்லும் வழியில் அரிசி திருடப்படலாம் என்பதால் விற்பனையாளர்கள் அரிசி ஏற்றி வரும் வாகனங்களை பின்தொடர்ந்து செல்ல அறிவுறுத்தப்பட்டது.

அப்படி சென்றும் ஆவணங்களில் பதிவாகியுள்ளதை விட எடை மேடையில் வாகனத்தை நிறுத்தி சரிபார்க்கப்படும் போது 10 சதவீதம் வரை எடை குறைகிறது. இதுபற்றி புகாரளித்தாலும் நுகர்பொருள் வாணிபக்கழக அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை.

மூடையில் அரிசி குறைவு என்பது பல மாதங்களாகவே நடைமுறையில் இருந்தாலும், அதை அட்டைதாரர்களுக்கு போடும் அரிசியில் குறைத்து போட்டு ஊழியர்கள் சமாளித்து வந்தனர்.

வழக்கமாக ரேஷன் ஊழியர்கள் சிலர் தான் எடை குறைப்பு செய்து மோசடி செய்வதாக புகார் வரும். தற்போது இந்த குறைவான எடை உள்ள அரிசி ரேஷன் கடை ஊழியர்கள் தலையில் விழுந்துள்ளது. இதனால் ஊழியர்கள் புலம்ப துவங்கியுள்ளனர். இதற்கிடையில் புளூடூத் நடைமுறை மூலம் எடை போட காலதாமதம் ஆகிறது.

ஒரு நாளைக்கு 200 பேர் வரை விநியோகிக்கப்பட்ட நிலையில் தற்போது 60 பேர் வரை மட்டுமே பொருள் விநியோகிக்கப்படுவதாக கூறுகின்றனர்.

புதிய நடைமுறையை தொய்வில்லாமல் சிறப்பாக கொண்டு செல்ல, குடோன்களில் இருந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் அரிசி மூடைகளை அங்கேயே எடை வைத்து அதன் பிறகு ஆவணங்களில் பதிவு செய்யவும், அனைத்து ரேஷன் கடைகளுக்கும் கூடுதலாக எடையாளர் ஒருவரை நியமிக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us