ADDED : பிப் 12, 2024 05:01 AM
மானாமதுரை: மானாமதுரை கூட்டுறவு பால் பண்ணையில் பால் விலை லிட்டருக்கு ரூ.4 வரை உயர்ந்ததால், வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.
மானாமதுரையில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க பால் பண்ணைக்கு பால் உற்பத்தியாளர்களிடம் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. தினமும் 1,300லிட்டர் பால் கொள்முதல் செய்து, சில்லரை விற்பனையாக 700 லிட்டர் விற்றபின், எஞ்சிய 600 லிட்டரை காரைக்குடி ஆவினுக்கு அனுப்பி வருகின்றனர்.
நேற்று முன்தினம் வரை இங்கு லிட்டர் ரூ.42க்கு விற்பனை செய்த பாலின் விலை, நேற்று முதல் விலை லிட்டர் ரூ.46 ஆக உயர்ந்துவிட்டன. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து பால்பண்ணை தரப்பில் கூறியதாவது, பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை லிட்டருக்கு ரூ.3 வரை உயர்த்தி விட்டனர். இதன் காரணமாக பால் விலையும் உயர்ந்து விட்டது, என்றனர்.