ADDED : ஜன 31, 2024 01:45 AM

சிவகங்கை:பொட்டப்பாளையம் அருகே நடந்த கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பொட்டப்பாளையத்தைச் சேர்ந்தவர் முத்து மகன் முத்துராஜா 20. அங்குள்ள தனியார் கல்லுாரியில் பணிபுரிந்துள்ளார். இவரும், மாமா மகன் அஜித்தும் 20, கடந்த 2014 டிச.14 ல் பொட்டப்பாளையம் அருகே குசவபட்டி ரோட்டில் உள்ள குழாயில் குளித்துள்ளனர். அந்த வழியாக வந்த பாட்டம் கிராமத்தை சேர்ந்த முத்து விஜி , பால்பாண்டி 35, பிரசாந்த் 28 மற்றும் ஒரு சிறுவன் உட்பட நான்கு பேரும் தகராறு செய்து அஜித்தையும் முத்துராஜாவையும் அரிவாளால் தாக்கியுள்ளனர். இதில் முத்துராஜா உயிரிழந்தார். திருப்புவனம் போலீசார் சிறுவன் உட்பட நான்கு பேரையும் கைது செய்தனர். இதில் சிறுவனை தவிர மற்ற மூன்று பேர் மீதான வழக்கானது சிவகங்கை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது.
வழக்கு நடக்கையில் முத்துவிஜி இறந்தார். விசாரித்த நீதிபதி சத்யதாரா குற்றவாளிகளான பால்பாண்டி, பிரசாந்திற்கு ஆயுள் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதமும், கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். அரசு தரப்பில் வழக்கறிஞர் பிரபாகர் ஆஜரானார்.