Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/'அறிவு பசி போக்கும் உணவு புதையல் புத்தகம்' : சிவகங்கை புத்தக கண்காட்சி இன்றே கடைசி

'அறிவு பசி போக்கும் உணவு புதையல் புத்தகம்' : சிவகங்கை புத்தக கண்காட்சி இன்றே கடைசி

'அறிவு பசி போக்கும் உணவு புதையல் புத்தகம்' : சிவகங்கை புத்தக கண்காட்சி இன்றே கடைசி

'அறிவு பசி போக்கும் உணவு புதையல் புத்தகம்' : சிவகங்கை புத்தக கண்காட்சி இன்றே கடைசி

ADDED : பிப் 05, 2024 11:51 PM


Google News
Latest Tamil News
சிவகங்கை, : புத்தகங்களை வாசிப்பதன் மூலம் தினமும் புதிய விஷயங்களை கற்கலாம். மூளை ஆரோக்கியம் பெறும். மொழி புலமை அதிகரிக்கும். மன அழுத்தம் போக்கும். கற்பனை திறன் மற்றும் தொடர் பாடல் திறன் மேம்படும். தனித்திறமை, படைப்பாற்றலுக்கு புத்தகம் வழிகாட்டியாக அமையும். பாடநுால்களை படிப்பது கூடுதல் மதிப்பெண் பெறும் நோக்கம் மட்டுமே. ஆனால், பொது நுால்கள் வாழ்க்கை முறை, ஒழுக்க நெறிகளை நோக்கமாக கொண்டு, நல் வாழ்வுக்கு அடித்தளம் அமைக்கும் நற்குணங்களை தரும். அந்த நற்குணங்களை நம்முள் விதைப்பது தான் புத்தகம்.

அறிவு பசிக்கு உணவளிக்கும் புதையல்


புத்தகம் கையில் இருந்தால் படிப்பதற்கு ஒரு தடையும் இல்லை. அறிவு பசிக்கு உணவளிக்கும் ஒரே புதையல் புத்தகம் மட்டுமே. அந்த புதையல் கிடைக்கும் பொக்கிஷ பூமியாக சிவகங்கையில் புத்தக கண்காட்சி மற்றும் திருவிழா அமைந்துள்ளது. இன்றே கடைசி நாளாக இருந்தாலும், காலை 10:00 முதல் இரவு 10:00 மணி வரை கண்காட்சி திறந்திருக்கும். 110 ஸ்டால்களில் 10 ஆயிரம் தலைப்புகளில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் கண்காட்சியை அலங்கரிக்கின்றன. அனுமதி இலவசம். புத்தக விலையில் 10 சதவீத தள்ளுபடி உண்டு. இவை தவிர பள்ளி, கல்லுாரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், பேச்சாளர்களின் சிறப்புரை அரங்கை அலங்கரிக்கின்றன. வாசிப்பை நேசிக்க செய்யும் இப்புத்தக கண்காட்சி ஆண்டுதோறும் உற்சாகத்தோடு நடைபெற வேண்டும் என புத்தக ஆர்வலர்கள் தங்கள் ஆவலை தெரிவிக்கின்றனர்.

ரூ.1,000 மதிப்புள்ள புத்தகங்கள் இலவசம்


புத்தகத்திருவிழா அரங்கு 57 ல் தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் அரங்கு இடம் பெற்றுள்ளது. இங்கு தினமலர் நாளிதழின் ஆண்டு சந்தா ரூ.1999 ரொக்கம் அல்லது ஆன்லைன் அல்லது காசோலை மூலம் செலுத்தினால், ரூ.1,000 மதிப்புள்ள புத்தகம் இலவசம். புத்தகத்திற்கு 10 சதவீதம் தள்ளுபடியும் உண்டு.

//

வாசகர்கள் கவனம் ஈர்த்த புத்தகங்கள் சில...

* நலம் நம் கையில்:

நம் ஆரோக்கியத்தை நாமே பாதுகாக்கலாம் என்ற நம்பிக்கை தரும் மருத்துவ பெட்டகமாக உள்ளது. ஆசிரியர், 33 கட்டுரைகளை இரு பாகமாக பிரித்து தந்துள்ள 'அஞ்சறைப் பெட்டி' இது. இருதயம், சிறுநீரகம், இரைப்பை, கல்லீரல் காக்க என உடலின் ஒவ்வொரு உறுப்பையும் எப்படி காப்பது என்பது குறித்து தெளிவான விளக்கம் கிடைத்துள்ளது. மாரடைப்பு, பக்கவாதம், உயர் ரத்த அழுத்தம் போன்ற ஆபத்தான நோய்களை தவிர்க்கும் மருத்துவ ரகசியங்கள் இப்புத்தகத்தில் புதைந்துள்ளன. மருத்துவ உலகில் மனித உயிர்களை பாதுகாக்க ஒவ்வொருவரின் கையிலும் இருக்க வேண்டிய அவசியமான புத்தகம் நலம் நம் கையில் மட்டும் தான்.

ஆசிரியர்: டாக்டர் கு.கணேசன்

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்.

விலை : ரூ.190.

///

* அப்துல் கலாம் : வாழ்வும் வழிகாட்டலும்

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறவும், தன் வாழ்க்கையில் வெற்றி பெறவும் மனிதனுக்கு தேவை ஆற்றலும் வாய்ப்பு வளங்களும் தான். குறிக்கோளில்லாத வாழ்க்கையை வாழ்வதில் அர்த்தமில்லை. நீ கிடைக்காத ஒன்றுக்காக வருந்துவதால் பயனேதும் இல்லை. நம் ஒவ்வொருவருக்கு உள்ளும் இயங்கும் சக்திகள் அநேகம். அவற்றுள் தகுதியானவற்றை நாம் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். மேற்பட்ட பிறவிகளாகிய நாம் விருப்பம், நம்பிக்கைகளை வளர்த்து கொள்ள வேண்டும். மகத்தான கனவு காண்பவர்கள் கணநேர மகிழ்ச்சியைக் கைவிடுவதும் அருஞ்செயல்களுக்கான குறிக்கோளை அமைத்துக்கொள்வதும் அவசியம் என்ற முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் கவிதையின் குறிக்கோளை இபுத்தகம் எளிதாக விளக்கியுள்ளது.

ஆசிரியர்: சி.எஸ்.,தேவநாதன்,

வெளியீடு: நேஷனல் பப்ளிஷர்ஸ்

விலை: ரூ.160.

///

* அச்சம் தவிர்....

அச்சமே பதற்றத்திற்கு காரணம். பதற்றம் ஏற்படுகிறபோது கைகள் நடுங்கும், மனம் பதறும், சொற்கள் குளறும், செயல் பிறழும். நிறைய மாணவர்கள் நன்றாக படித்தாலும் அச்சம் ஏற்படுகிறபோது படித்தவற்றை மறந்து ரோட்டின் நடுவே நிற்கும் வாகனத்தை போல, தேர்வு அறையில் தடுமாறி விடுகின்றனர். விளையாட்டு மட்டுமல்ல. தேர்வும் ஒரு உத்தியே. தேர்வின் நுணுக்கங்களைச் சரியாகப் புரிந்துகொண்டால் அதை மகிழ்ச்சியோடு அணுக முடியும். எவ்வாறு தேர்வை வகுப்பு ஆரம்பிக்கும் முதல் நாளில் இருந்து முறையாக அணுகுவது என்பதை பள்ளி குழந்தைகளுக்கு தோளில் கைபோட்டு தோழமையோடு சொல்ல விரும்பியுள்ளார் இப்புத்தகத்தின் ஆசிரியர். படிப்பை திருவிழாவாக்க, பரீட்சையை பட்டாடையாக்க, மதிப்பெண்களை மத்தாப்பாக மாற்ற அவர்களை ஆயத்தப்படுத்த ஆசிரியர் ஆசைப்பட்டதின் விளைவு தான் அச்சம் தவிர் என்ற நுால் உருவாக காரணமாக அமைந்துள்ளது.

ஆசிரியர் : இறையன்பு

வெளியீடு: கற்பகம் புத்தகாலயம்.

விலை: ரூ.90.

///

என்னென்ன புத்தகங்கள் வாங்கினோம்

ஆன்மிக, மருத்துவ புத்தகத்திற்கு வரவேற்பு

மாணவர்களுக்கு தேவையான பாடபுத்தகங்கள், இக்கண்காட்சியில் ஒரே இடத்தில் கிடைத்ததால் வாங்கினோம். குடும்ப தலைவிகள் வீட்டில் ஓய்வு நேரத்தில் வரலாற்று கதைகளை படிக்க பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்ற புத்தகங்கள் கிடைத்தது. தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் வெளியிட்ட ஏராளமான ஆன்மிக, மருத்துவ புத்தகங்கள் அதிகளவில் வாங்கினோம்.

எம்.சங்கீதா,

கல்குறிச்சி, மானாமதுரை:

தேடி எடுத்தோம் தரமான புத்தகம்

பள்ளி, கல்லுாரி மாணவர்கள் முதல் கவிஞர்கள், எழுத்தாளர்கள், ஆசிரியர்கள் என கல்வியாளர்கள் அனைத்து தரப்பினரையும் மீண்டும் படிக்க துாண்டும் விதத்தில் சிவகங்கை புத்தக கண்காட்சியில் புத்தகங்கள் குவிந்து கிடக்கின்றன. ஒவ்வொன்றும் தரமான புத்தகங்களாகவே உள்ளன. ஒவ்வொரு புத்தகத்திற்காகவும், மதுரை, சென்னை போன்ற நகரங்களில் தேடி தேடியும் கிடைக்காத புத்தகங்கள் கூட இக்கண்காட்சியில் எளிதாக பெற முடிந்தது.

ஜி.பிரபாவதி

, ஆசிரியர், கல்குறிச்சி, மானாமதுரை:

வாசிப்பை நேசிக்க துாண்டும் புத்தகம்

நான் போட்டி தேர்வுக்கு தயாராகி வருகிறேன். சென்னை, மதுரை போன்ற கோச்சிங் சென்டர்களில் கிடைக்கும் அரிய வகை போட்டி தேர்வு புத்தகங்கள் அனைத்தும், சிவகங்கை கண்காட்சியில் கிடைக்கின்றன. ஐ.ஏ.எஸ்.,ஐ.பி.எஸ்., மத்திய, மாநில அரசு பணிக்கான போட்டி தேர்வுக்கான புத்தகங்கள் அனைத்தும் இங்கு கிடைப்பது, சிவகங்கை பட்டதாரிகளுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது என்றனர்.

பி.ஸ்ரீவித்யா

, கல்லுாரி மாணவி, சிவகங்கை





      Our Apps Available On




      Dinamalar

      Follow us