/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கீழடி திறந்த வெளி அருங்காட்சியக பணி தாமதமாக வாய்ப்பு கீழடி திறந்த வெளி அருங்காட்சியக பணி தாமதமாக வாய்ப்பு
கீழடி திறந்த வெளி அருங்காட்சியக பணி தாமதமாக வாய்ப்பு
கீழடி திறந்த வெளி அருங்காட்சியக பணி தாமதமாக வாய்ப்பு
கீழடி திறந்த வெளி அருங்காட்சியக பணி தாமதமாக வாய்ப்பு
ADDED : மே 31, 2025 11:34 PM
கீழடி:கீழடியில் திறந்த வெளி அருங்காட்சியக பணி தாமதமாக வாய்ப்புள்ளது.
கீழடியில் தமிழக தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு நடந்த இடங்கள் திறந்த வெளி அருங்காட்சியகமாக மாற்ற திட்டமிடப்பட்டு கடந்த ஜனவரி 23ல் முதல்வர் காணொலி காட்சி மூலம் பணிகளை தொடங்கி வைத்தார்.
2026 ஆகஸ்டில் பணிகள் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டு திறந்த வெளி அருங்காட்சியகத்திற்கு 17 கோடியே 80 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டது. நான்கரை ஏக்கர் பரப்பளவில் 67 ஆயிரத்து 343 சதுர அடியில் இரண்டு அரங்குகளாக திறந்த வெளி அருங்காட்சியகம் அமைய உள்ளது.
கார் பார்க்கிங், பார்வையாளர்கள் நடந்து செல்ல நீண்ட நடைபாதை, ஓய்வு எடுக்க சிமென்ட் பெஞ்சுகள், கழிப்பறை வசதி என பல்வேறு வசதிகளுடன் திறந்த வெளி அருங்காட்சியகம் அமைய உள்ளது.
அகழாய்வு நடந்த இடங்கள் அனைத்தும் தென்னை மரங்கள் அடர்ந்த விவசாய நிலங்கள், விவசாயத்திற்கு மோட்டார் இயக்க மின் இணைப்புகளும் வழங்கப்பட்டிருந்தன.
விவசாய இணைப்புகளுக்காக தென்னந்தோப்புகளுக்கு நடுவே உயர் மின்னழுத்த கம்பி கொண்டு செல்லப்பட்டிருந்தன.
தற்போது திறந்த வெளி அருங்காட்சியகம் அமைய உள்ளதால் உயர் மின்னழுத்த கம்பிகளை மாற்றியமைக்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளது.
இதற்காக தமிழக தொல்லியல் துறை மின்வாரியத்திற்கு பத்து லட்ச ரூபாய் வரை செலுத்த வேண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. உயர் மின்னழுத்த கம்பிகளை வேறு பகுதிக்கு மாற்றிய பின் தான் கட்டுமான பணிகளை தொடங்க முடியும்.
மின்கம்பிகளை இடமாற்றவே ஒரு மாதத்திற்கு குறையாமல் பணிகள் நடைபெறும், மின்வாரியத்தில் ஆட்கள் பற்றாக்குறை உள்ள நிலையில் உடனடியாக பணிகள் நடைபெற வாய்ப்பில்லை.
அதிலும் உயர் மின்னழுத்த கம்பிகளை தாங்கும் மின்கோபுரம் அமைக்க தேவையான இடங்களும் வேண்டும், கீழடியைச் சுற்றிலும் விவசாய நிலங்களே உள்ளன.
இவற்றில் மின்கோபுரம் அமைக்க விவசாயிகள் ஒப்புதல் பெற வேண்டும்.
இதற்காக தொல்லியல் துறை மின்வாரியத்திடம் விண்ணப்பிக்க உள்ளது. அதன் பின் தான் கட்டுமான பணிகள் தொடங்க முடியும், எனவே திட்டமிட்டதை விட 2027ல்தான் பணிகள் முடிவடைய வாய்ப்புள்ளது.