Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ திருப்புவனத்தில் வெல்லம் தயாரிப்பு பணி நிறுத்தம்

திருப்புவனத்தில் வெல்லம் தயாரிப்பு பணி நிறுத்தம்

திருப்புவனத்தில் வெல்லம் தயாரிப்பு பணி நிறுத்தம்

திருப்புவனத்தில் வெல்லம் தயாரிப்பு பணி நிறுத்தம்

ADDED : ஜன 08, 2025 06:30 AM


Google News
Latest Tamil News
திருப்புவனம் : திருப்புவனம் கூடுதல் செலவு ஆவதால் வெல்லம் தயாரிப்பு பணி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. திருப்புவனம், திருப்பாச்சேத்தி, கலியாந்துார், மாரநாடு உள்ளிட்ட பகுதிகளில் 16 ஆயிரம் ஏக்கரில் கரும்பு பயிரிடப்பட்டது.

படமாத்துாரில் தனியார் சர்க்கரை ஆலை வருவதற்கு முன் அகரம், திருப்புவனம், திருப்பாச்சேத்தி, மழவராயனேந்தல், லட்சுமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வெல்லம் தயாரிக்கும் கிரஷர்கள் இயங்கி வந்தன.

இங்கிருந்து வெல்லம் தயாரிக்கப்பட்டு மதுரை மொத்த மார்க்கெட்டிற்கு அனுப்பப்பட்டு வந்தது. வெல்லம் தயாரிக்க மஞ்சுளா ரக கரும்புகளையே விவசாயிகள் அதிகம் பயன்படுத்தி வந்தனர். நோய் தாக்குதல், வறட்சி எதுவும் இல்லாமல் இருந்தால் ஏக்கருக்கு 35 முதல் 60 டன் கரும்பு வரை கிடைக்கும்.

விவசாயிகள் பலரும் தற்காலிக மின் இணைப்பு பெற்று விவசாய நிலங்களில் கிரஷர் அமைப்பது வழக்கம். கிரஷர் அமைக்க சராசரியாக இரண்டு லட்ச ரூபாய் வரை செலவான நிலையில் தற்போது நான்கு லட்ச ரூபாய் வரை செலவாகிறது.

நாள் ஒன்றுக்கு ஐந்து முதல் ஏழு கொப்பரை வரை காய்ச்சலாம். ஒரு கொப்பரைக்கு 70 முதல் 75 கிலோ வரை வெல்லம் கிடைக்கும். சாதாரண காலங்களில் வெல்லத்தின் விலை கிலோ 40 ரூபாய் என மொத்த விலையில் வியாபாரிகள் வாங்குவார்கள், பொங்கல், தீபாவளி காலங்களில் விலை சற்று அதிகரிக்கும்.

கிரஷர் இயக்க கரூர், வாடிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கூலி தொழிலாளர்கள் அதிகம் வருவார்கள், தற்போது போதிய கூலி தொழிலாளர்கள் கிடைக்காததாலும், செலவீனம் அதிகரிப்பதாலும் வெல்லம் தயாரிப்பு பணியே நடைபெறவில்லை.

விவசாயிகளிடம் இருந்து வெல்லம் வாங்கி விற்பனை செய்யும் வியாபாரிகளும் மாற்று தொழிலுக்கு சென்று விட்டனர்.

விவசாயி வேலாயுதம் கூறுகையில்: மற்ற மாவட்டங்களில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. நவீன முறைகள், மான்யங்கள் விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக விவசாயத்திற்கு எந்த விதமான முக்கியத்துவமும் அளிக்கப்படுவதில்லை. திருப்புவனம் வட்டாரத்தில் நாட்டு தக்காளி ஏராளமாக விளைவிக்கப்பட்ட நிலையில் நாட்டு தக்காளியே எங்குமே பயிரிடுவதில்லை. விவசாயிகள் ஊடுபயிராக மட்டுமே பயிரிடுகின்றனர். அதுபோல வெங்காய சாகுபடியும் குறைந்து விட்டது. வெல்லம் தயாரிக்க திண்டுக்கல் மாவட்டம் பழநி உள்ளிட்ட பகுதிகளில் நவீன இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு விவசாயிகள் வெல்லம் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

கரும்பு சாகுபடி பரப்பளவும் அப்பகுதியில் அதிகரித்து வருகிறது. ஆனால் சிவகங்கை மாவட்டத்தில் 16 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டு வந்த கரும்பு 2021ல் மூவாயிரத்து 500 ஏக்கராக இருந்தது. இந்தாண்டு தான் சற்று அதிகரித்து வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் விவசாயத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us