ADDED : செப் 20, 2025 04:03 AM
சிவகங்கை: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் சட்டசபை மதிப்பீட்டு குழு ஆலோசனை கூட்டம் நடந்தது. 41 பயனாளிகளுக்கு ரூ.1.44 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
கூட்டத்திற்கு குழு தலைவர் காந்திராஜன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். கலெக்டர் பொற்கொடி, தேவகோட்டை சப் - கலெக்டர் ஆயுஷ் வெங்கட் வத்ஸ், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி முன்னிலை வகித்தனர். எம்.எல்.ஏ.,க்கள் காரைக்குடி மாங்குடி, மானாமதுரை தமிழரசி உட்பட மதிப்பீட்டு குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
குழு தலைவர் காந்திராஜன் கூறியதாவது: ரூ.109 கோடியில் நடைபெற்ற காஞ்சிரங்கால் பைபாஸ் ரோட்டில் ராகினிப்பட்டி அருகே ரயில்வே மேம்பாலம் கட்டும் பணியை விரைந்து துவக்க வேண்டும்.
காரைக்குடி மாநகராட்சிக்கு வடக்கு, தெற்கு மண்டல அலுவலகம், பாதாள சாக்கடை விரிவாக்கம் செய்யப்படும். கண்ணங்குடியில் உயர்மட்ட பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சிவகங்கையில் ரூ.4 கோடியில் கல்லுாரி மாணவிகள் விடுதி கட்டியதில் 3 அடி பள்ளத்திற்கு மழை நீர் தேங்கியுள்ளது.
இதை சீர்செய்ய ரூ.40 லட்சத்தில் டிசம்பருக்குள் முடித்து தருவதாக உறுதி அளித்துள்ளனர்.
பெரியாறு பாசன கால்வாயில் 43 கண்மாய்க்கு முழுமையான நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.