ADDED : ஜன 05, 2024 04:38 AM

திருப்புத்துார் ; திருப்புத்துார் அருகே ந.வயிரவன்பட்டியில் வளரொளிநாதர் வயிரவசுவாமி கோயிலில் உலக நன்மை வேண்டி 64 பைரவ மகாயாகம் நிறைவு பெற்றது.
இக்கோயிலில் எழுந்தருளியுள்ள மார்த்தாண்ட வயிரவசுவாமிக்கு மார்கழி தேய்பிறை அஷ்டமியன்று இறைவன் சகல ஜீவராசிகளுக்கும் படியளக்கவும், உலக நன்மை வேண்டியும் 64 பைரவர் மகாயாகத்தை ஜன. 2ல் பிள்ளையார்பட்டி பிச்சைக்குருக்கள் துவக்கி வைத்தார். தொடர்ந்து மூன்று நாட்கள் நடந்த மகாயாகத்தில் வயிரவன்பட்டி கோயில் குருக்கள் சிவக்குமார் தலைமையில் 100 சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜையில் பங்கேற்றனர்.
நேற்று காலை 6:00 மணிக்கு 4ம் காலயாக பூஜை துவங்கி, கோ பூஜை, வடுக பூஜை, கன்யா பூஜையும், சுமங்கலி பூஜை, கஜ பூஜை, அஸ்வமேத பூஜை நடந்து பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது.
பின்னர் யாகசாலையிலிருந்து 65 கலசங்களும் புறப்பாடாகி தேரோடும் வீதியில் கோயிலை வலம் வந்து மூலவர் சன்னதி சென்று மூலவருக்கு அபிேஷகம், ஆராதனைகள் நடந்தன.
பின்னர் சிறப்பு அலங்காரத்தில் உற்ஸவ பைரவருக்கும் தீபாராதனை நடைபெற்றது.
ஏற்பாட்டினை தலைவர் திட்டாணி, துணைத் தலைவர் அண்ணாமலை, செயலாளர் ராமசாமி, இணைச் செயலாளர் சாமிநாதன், பொருளாளர் காரைக்குடி பழனியப்பன், பி.ஆர்.ஓ. கண்டவராயன்பட்டி பழனியப்பன் செய்தனர்.