Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/மானியத்தில் பவர் டிரில்லர் தருவதாக நுாதன மோசடி; பணத்தை இழந்து தவிக்கும் விவசாயிகள்

மானியத்தில் பவர் டிரில்லர் தருவதாக நுாதன மோசடி; பணத்தை இழந்து தவிக்கும் விவசாயிகள்

மானியத்தில் பவர் டிரில்லர் தருவதாக நுாதன மோசடி; பணத்தை இழந்து தவிக்கும் விவசாயிகள்

மானியத்தில் பவர் டிரில்லர் தருவதாக நுாதன மோசடி; பணத்தை இழந்து தவிக்கும் விவசாயிகள்

ADDED : ஜூன் 23, 2025 05:55 AM


Google News
Latest Tamil News
திருப்புவனம்: மாவட்ட அளவில் மானிய விலையில் பவர் டிரில்லர் தருவதாக கூறி விவசாயிகளிடம் பல லட்ச ரூபாய் வரை வசூல் செய்து ஏமாற்றியதாக புகார் எழுந்துள்ளது.

விவசாயிகளுக்கு மானிய விலையில் டிராக்டர், பவர் டிரில்லர், ஸ்பிரேயர், பிளாஸ்டிக் குழாய்கள் ஆகியவை வேளாண்மை பொறியியல் துறை சார்பில் சிறு, குறு விவசாயிகளுக்கு 25 முதல் 100 சதவீத மானியத்தில் இக்கருவிகள் வழங்கப்படுகின்றன. தனியார் நிறுவனம் மூலம் விவசாயிகளுக்கு பவர் டிரில்லர் வழங்கப்படுகிறது. இந்த இயந்திரம் ரூ.2.30 லட்சம் வரை விற்கப்படுகிறது. இதில், ரூ.1 லட்சம் மானியம் போக, எஞ்சிய ரூ.1.30 லட்சத்தை விவசாயிகள் தனியார் நிறுவன பெயரில் டி.டி.,யாக எடுத்து வழங்கினர். கடந்த ஆண்டு இம்மாவட்டத்தில் ஏராளமான விவசாயிகளிடம் இருந்து பவர் டிரில்லர் மானியத்தில் பெற நிதியை பெற்றனர். ஆனால், பணம் செலுத்தி ஒரு ஆண்டிற்கு மேல் ஆகியும் பவர் டிரில்லர் வழங்கப்பட வில்லை. திருப்புவனம் ஒன்றியத்தில் உள்ள விவசாயிகளிடம் மானியம் தவிர்த்து ரூ.70 ஆயிரம் முதல் ரூ.1.30 லட்சம் வரை பெற்றுள்ளனர். ஆனால், அவர்களுக்கு இன்று வரை பவர் டிரில்லர் வழங்காமலும் பணத்தையும் திரும்ப தராமல் மோசடி செய்துள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து வில்லியரேந்தல் விவசாயி அய்யப்பன் கூறியதாவது, வாழை , தென்னை பயிரிட்டுள்ள நிலங்களில் பவர் டிரில்லர் மூலமே உழவு செய்ய முடியும். இந்த இயந்திரம் ஒரு மணிநேரத்திற்கு ரூ.4,000 வரை செலவாகிறது. மானியத்தில் வழங்குவதாக கூறியதால் வீட்டில் இருந்த நகைகளை அடமானமாக வைத்து பணத்தை கட்டினோம். ஆனால், இன்று வரை விவசாயிகளுக்கு பவர் டிரில்லரை வழங்கவில்லை. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய வேளாண்மை பொறியியல் துறை அதிகாரிகளும் கண்டு கொள்ளவே இல்லை, என்றார்.

பணம் வழங்கிவிட்டோம்:

இது குறித்து தனியார் நிறுவனத்தினர் கூறியதாவது, மாவட்ட அளவில் இது வரை 450 பவர் டிரில்லர் வழங்கியுள்ளோம். மானியம் குறித்த பிரச்னை நடந்ததால் உரிய நேரத்தில் இயந்திரம் வழங்க முடியவில்லை. இன்னும் 5 பேர் தவிர மற்றவர்களுக்கு பணத்தை திருப்பி வழங்கி விட்டோம், என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us