தொழிலாளியை தாக்கிய 6 இளைஞர்கள் கைது
தொழிலாளியை தாக்கிய 6 இளைஞர்கள் கைது
தொழிலாளியை தாக்கிய 6 இளைஞர்கள் கைது
ADDED : ஜன 12, 2024 12:26 AM
காரைக்குடி: காரைக்குடி ரயில்வே பீடர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் பாதகுமார் 35. இவர் கல்லுப்பட்டறை தொழில் செய்து வருகிறார். மருதுபாண்டியர் நகரைச் சேர்ந்த மணிவண்ணன், சரண், பாண்டி மூவரிடம் சிலர் செயின் மற்றும் போன்களை பறித்துச் சென்றுள்ளனர். இது சம்பந்தமாக தெற்கு போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரை பாதகுமார் கொடுத்ததாக கூறி, காரைக்குடி கழனிவாசல் கோதண்டராமன் 19, மற்றும் சிலர் பாதகுமார் மற்றும் சாகுல்அன்சாரி இருவரையும் வாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கினர். பாதகுமார் காரைக்குடி வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். சம்பவத்தில் ஈடுபட்ட கோதண்டராமன், திருக்குமார் 19, முத்துக்குமார் 20, தமிழ்ச்செல்வன் மேலும் இரு சிறார்கள் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்து ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.
இளம்பெண் பலி
மானாமதுரை: மானாமதுரை நியூ வசந்த நகர் பகுதியைச் சேர்ந்த கென்னடி, ராஜபுஷ்பம் மகள் வினிதா, இவரது தாய் ராஜபுஷ்பம் மானாமதுரை புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ஒரு டூவீலர் ஷோரூமில் வேலை பார்த்து வருகிறார். அவருக்கு வினிதா நேற்று மதியம் சாப்பாடு கொடுத்து விட்டு டூவீலரில் வீட்டிற்கு திரும்பினார். மானாமதுரை புது பஸ் ஸ்டாண்ட் எதிர்புறம் திருப்பூரில் இருந்து ராமேஸ்வரம் சென்ற அரசு பேருந்து மோதி சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பலியானார். மானாமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
திருப்புவனம்: திருப்புவனம் அருகே லாடனேந்தலைச் சேர்ந்தவர் தவமணி 69, வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருப்புவனம் அருகே கலியாந்துாரைச் சேர்ந்தவர் துரைசாமி 51, துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருப்புவனம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
வீட்டில் நகை திருட்டு
பூவந்தி: கருங்குளத்தைச் சேர்ந்த ரகுபதி, அம்சவள்ளி இருவரது வீடுகளும் அருகருகே உள்ளன. இருவரும் வீட்டை பூட்டி விட்டு வயலுக்கு சென்று விட்டனர். மாலையில் வீடு திரும்பிய போது ரகுபதி வீட்டின் பூட்டை உடைத்து ஆறு கிராம் எடையுள்ள மூன்று தங்க தோடுகளையும் அம்சவல்லி வீட்டின் கூரையை பிரித்து உள்ளே நுழைந்த திருடர்கள் இரண்டு பவுன் தங்க சங்கிலியையும் திருடி சென்றது தெரியவந்தது.
வேன் மோதி ஒருவர் பலி
பூவந்தி: பூவந்தி அருகே கீரனுார் வலையப்பட்டியை சேர்ந்தவர் கருப்புச்சாமி 52, சிவகங்கை சென்று விட்டு டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) திரும்பும் போது படமாத்துார் விலக்கில் எதிரே வந்த தனியார் பள்ளி வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பூவந்தி போலீசார் வேன் டிரைவர் ராஜேஷ் கண்ணனிடம் விசாரிக்கின்றனர்.