ADDED : ஜூன் 19, 2024 05:06 AM
வீட்டில் நகை திருட்டு
காரைக்குடி: போக்குவரத்து நகர் கணேஷ்குமார் மனைவி சிந்து 32. இவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார். சிந்து வீட்டை பூட்டிவிட்டு பிள்ளையார்பட்டியில் உள்ள தந்தையை பார்க்க சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் கதவுகள் திறந்து கிடந்தது. பீரோவில் இருந்த 2 பவுன் தங்க தோடு, வெள்ளி பொருட்கள், ரூ.50 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிந்தது. குன்றக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
ரயிலில் இருந்து விழுந்தவர் பலி
மானாமதுரை: இளையான்குடி அருகே குறிச்சி சுப்பிரமணி மகன் ராதாகிருஷ்ணன் 36. இவர் சென்னை பெருங்களத்துாரில் ஜே.சி.பி., டிரைவராக இருந்தார். குறிச்சி கிராமத்தில் நடந்த திருவிழாவிற்கு வந்து,நேற்று முன்தினம் இரவு ராமநாதபுரம் -- சென்னை செல்லும் ரயிலில் சென்றார். மானாமதுரை கீழப்பசலை அருகே ரயிலில் இருந்து தவறிவிழுந்து பலியானார். ரயில்வே எஸ்.ஐ., வசந்தி விசாரிக்கிறார்.
குளத்தில் மூழ்கி பலி
திருக்கோஷ்டியூர்: தி.வைரவன்பட்டி குளத்தில் மர்ம நபர் இறந்துகிடப்பதாக திருப்புத்துார் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் குளத்தில் தேடியதில், நீரில் மூழ்கிய நிலையில் தம்பிபட்டி சவுந்திரபாண்டியன் மகன் செந்தில்குமார் 42 இறந்து கிடந்தது தெரிந்தது. திருக்கோஷ்டியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
வீட்டில் 15 பவுன் திருட்டு
திருப்புத்தூர் : காளியம்மன் கோயில் தெரு லாசர் 75. இவர் தன் மனைவி நவோமியுடன் வசிக்கிறார். இவர்களின் மகன்கள் வெளியூரில் வசிக்கின்றனர். ஜூன் 14 ல் இருவரும் மேலூரில் உள்ள மகள் வீட்டிற்கு சென்று விட்டு நேற்று காலை திருப்புத்துார் வந்தனர். அப்போது வீட்டின் சுற்றுச்சுவர் கேட், வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து பீரோவில் இருந்த 15 பவுன் நகையை திருடி சென்றனர். திருப்புத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.