/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கண்மாய், குளங்களில் மண் எடுக்க அனுமதி கண்மாய், குளங்களில் மண் எடுக்க அனுமதி
கண்மாய், குளங்களில் மண் எடுக்க அனுமதி
கண்மாய், குளங்களில் மண் எடுக்க அனுமதி
கண்மாய், குளங்களில் மண் எடுக்க அனுமதி
ADDED : ஜூலை 07, 2024 02:08 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் கட்டுப்பாட்டிலுள்ள ஏரிகள், குளங்கள், கண்மாயிலுள்ள களிமண் மற்றும் வண்டல் மண்ணை இலவசமாக விவசாயம் மற்றும் மண்பாண்ட பயன்பாட்டிற்கு எடுத்து செல்ல விதிமுறைகளுக்குட்பட்டு அனுமதி வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியுள்ளதாவது:
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி,பஞ்சாயத்து ராஜ் துறை கட்டுப்பாட்டில் உள்ள நீர் நிலைகளில் களிமண், வண்டல் மண்ணை விவசாயம் மற்றும் மண்பாண்ட தொழில்களுக்காக இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி வழங்குவது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பயனாளிகள் வசிப்பிடம் அல்லது வேளாண் நிலம் அமைந்துள்ள கிராமம் மற்றும் களிமண், வண்டல் மண்ணை துார்வாரி எடுத்துசெல்ல வேண்டிய கண்மாய், ஏரி, குளம் அமைந்துஉள்ள கிராமம் ஆகியவை அதே வட்டத்திற்குள் அமைந்திருக்க வேண்டும்.
விவசாயம் மற்றும் மண்பாண்ட தொழில் செய்வதற்கு களிமண், வண்டல் மண் எடுத்துச் செல்ல அனுமதி கோரும் விண்ணப்பங்களை உரிய கிராமக் கணக்குகளுடன் tnesevai.tn.gov.in என்ற இணையதள முகவரி வாயிலாக பயனாளிகள் சமர்ப்பிக்க வேண்டும்.
மண்பாண்ட தொழில் செய்பவர்கள் தமிழ்நாடு கூட்டுறவு சங்கம் சட்டம் 1983ன் கீழ் தமிழ்நாடு மண்பாண்டம் தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் பதிவுபெற்ற அங்கத்தினராக இருக்க வேண்டும். விவசாயம் பயன்பாட்டிற்கு விண்ணப்பிக்கப்பட்ட ஆவணங்களில் உள்ள புலஎண், பரப்பளவு, நிலவகைப்பாடு மற்றும் மண்பாண்ட பயன்பாட்டிற்கென பெறப்படும் விண்ணப்பம் மற்றும் ஆவணங்களில் மண்பாண்ட தொழிலின் உண்மைத்தன்மை மற்றும் விண்ணப்பத்தாரர்களின் வசிப்பிடம் குறித்து கிராம நிர்வாக அலுவலரால் சரிபார்க்கப்பட்டு முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஏழு நாட்களுக்குள் பரிசீலனை செய்து தாசில்தாருக்கு அனுப்பப்படும்.
விண்ணப்பத்தாரரால் அளிக்கப்பட்ட தகவல் திருப்திகரமாக இருப்பின், கிராம நிர்வாக அலுவலரின் சான்றுடன் விண்ணப்பம் பெறப்பட்ட தேதியிலிருந்து பத்து நாட்களுக்குள் சம்மந்தப்பட்ட நீர்நிலைகளிலிருந்து களிமண், வண்டல் மண் அகற்ற அனுமதி சம்மந்தப்பட்ட வட்டாட்சியரால் வழங்கப்படும். விண்ணப்பத்தாரர்களால் அளிக்கப்பட்ட தகவல் திருப்திகரமாக இல்லாவிட்டால், விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
வட்டாட்சியரால் வழங்கப்படும் அனுமதி 30 நாட்களுக்கு மிகாமல் வழங்கப்படும். தினசரி காலை 7:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை மட்டுமே களிமண், வண்டல் மண் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும்.
களிமண், வண்டல் மண்எடுக்கப்பட வேண்டிய நீர்நிலைகளின் கண்மாய்,ஏரி, குளம் விவரத்தை கலெக்டர் அலுவலகம், புவியியல் மற்றும் சுரங்கத்துறை, துணை இயக்குநர் அலுவலகம், துணை இயக்குநர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் விவசாயம், அனைத்து வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆகியவற்றில் பெற்றுக்கொள்ளலாம்.