ADDED : ஜூன் 23, 2024 03:54 AM
சிவகங்கை: பனங்குடியில் கோயில் திருவிழாவை முன்னிட்டி நடந்த மஞ்சுவிரட்டில் 300க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. காளைகள் முட்டியதில் 17 பேர் காயமடைந்தனர்.
சிவகங்கை பனங்குடியில் பெரியநாயகி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடந்தது. சிவகங்கை, காளையார்கோவில், மானாமதுரை, மேலுார், மதுரை பகுதிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
போட்டியானது மதியம் 12:00 மணிக்கு துவங்கியது. மஞ்சுவிரட்டு தொழுவில் இருந்து 200க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்க்கப்பட்டது. தொழுவிற்கு வந்த காளையின் உரிமையாளருக்கும், காளைகளுக்கும் வேட்டி, துண்டு வழங்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது.
முன்னதாக கோயில் முன்பாக உள்ள பொட்டலில் ஆங்காங்கே கட்டுமாடுகளாக 100க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இந்த காளைகள் முட்டியதில் 17 பேர் காயம் அடைந்தனர். இதில் ஒருவர் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மஞ்சுவிரட்டு பாதுகாப்பு பணியில் 50க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டிருந்தனர்.