ADDED : ஜூலை 04, 2024 01:22 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் 1112 அரசு பள்ளிகளுக்கு பள்ளி மானிய தொகையின் முதல் தவணையாக ரூ.1 கோடியே 43 லட்சத்து 82 ஆயிரத்து 500யை அரசு விடுவித்துள்ளதாக, கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மூலம் இக்கல்வி ஆண்டிற்கு தொடர் செலவினத்திற்காக மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளி மானிய நிதி விடுவிக்கப்படும். இதில், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட உள்ள டேப் லெட்' க்கு தேவையான அலைபேசி சிம் கட்டணம், பள்ளி வளாகத்தில் சோப்பு, கிருமி நாசினி துாய்மை செய்ய தேவையான பொருட்கள் இருப்பு வைத்தல், பள்ளி வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்திகரிப்பு பணி செய்வது அவசியமாகும்.
இது தவிர பள்ளி சுகாதாரம் கடைபிடித்தல் உள்ளிட்ட பல்வேறு செலவினங்களுக்காக அரசு வழங்கும் மானிய தொகையின் முதற்கட்ட தவணையாக 50 சதவீத நிதியை அளித்துள்ளது. மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 1112 அரசு பள்ளிகளுக்கு முதற்கட்ட மானிய தொகையாக ரூ.1 கோடியே 43 லட்சத்து 82 ஆயிரத்து 500 யை அரசு சிவகங்கை மாவட்ட கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்துள்ளது, என்றார்.