ADDED : மார் 14, 2025 07:30 AM

சிவகங்கை: தேவகோட்டை அருகே மேக்காரைக்குடி தியாகராஜன் 60. இவர் முப்பையூரில் முடிதிருத்தும் கடை கட்ட முயற்சித்தார். இதற்கான பிளான் அப்ரூவல் மற்றும் வீட்டு மனை ரசீது பெற முப்பையூர் ஊராட்சி அலுவலகத்தில் 2 ஆண்டுக்கு முன் உரிய ஆவணத்துடன் விண்ணப்பித்தார். ஊராட்சி நிர்வாகத்தினர் ரசீது அளிப்பதாக அளித்த உறுதிபடி கடையை கட்டியுள்ளார்.
ஆனால் பிளான் அப்ரூவல் மற்றும் கடைக்கான ரசீது வழங்காமல் இழுத்தடித்து வந்துள்ளனர். அதிருப்தியான தியாகராஜன் சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித்திடம் புகார் அளித்தார். அவர் உத்தரவிட்டும் முப்பையூர் ஊராட்சி நிர்வாகம் பிளான் அப்ரூவலும், ரசீதும் வழங்காமல் இழுத்தடித்து வருவதாக கூறி, நேற்று மதியம் 12:00 மணிக்கு உடலில் பெட்ரோல் ஊற்றி சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் தியாகராஜன் தற்கொலைக்கு முயன்றார். அவரை அங்கிருந்த போலீசார் மீட்டு கலெக்டர் பி.ஏ.,(பொது) முத்துகழுவனிடம் அழைத்து சென்றனர். மனுவை பெற்ற அவர் தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ.,வின் நடவடிக்கைக்கு உத்தரவிட்டார்.