Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ குலுங்கியது ஏற்காடு; திணறியது மலைப்பாதை

குலுங்கியது ஏற்காடு; திணறியது மலைப்பாதை

குலுங்கியது ஏற்காடு; திணறியது மலைப்பாதை

குலுங்கியது ஏற்காடு; திணறியது மலைப்பாதை

ADDED : மே 25, 2025 02:21 AM


Google News
சேலம் :கோடை விழா, மலர் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணியர் குவிந்ததால், ஏற்காடு களைகட்டியது.சேலம் மாவட்டம் ஏற்காட்டில், 48வது கோடை விழா, மலர் காட்சி நேற்று முன்தினம் தொடங்கியது. இரண்டாம் நாளான நேற்று, பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணியர் ஏற்காட்டில் குவிந்தனர்.

அண்ணா பூங்காவில், தோட்டக்கலைத்துறை சார்பில் யானை, காட்டெருமை, முயல், குரங்கு, பாம்பு, மான், புலி உள்ளிட்ட வன விலங்குகள், மேட்டூர் அணையின், 16 கண் மதகு, ஒற்றை கொம்பு குதிரை, தர்பூசணி பழம் உள்ளிட்ட பல்வேறு உருவங்கள், ஆயிரக்கணக்கான ரோஜா மலர்களாலும், கார்நேஷன் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

குழந்தைகளுக்கான கார்டூன் கதாபாத்திரங்களான பிகாச்சு, சார்மண்டர் உள்ளிட்ட உருவங்கள், சுற்றுலா பயணியரை வெகுவாக கவர்ந்தது. ஏராளமானோர் குடும்பத்துடன் மலர் காட்சியை கண்டுகளித்து, 'செல்பி' எடுத்துக்கொண்டனர். அண்ணா பூங்காவுக்குள் செல்லவும், வெளியேறவும் நீண்ட வரிசையில் நின்று செல்லும் சூழல் நிலவியது. வண்ண விளக்குகள் அலங்காரம், நீரூற்று ஆகியவற்றையும் குழந்தைகள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

ஏரி, மான், ரோஜா பூங்காக்கள், படகு இல்லம், பொட்டானிக்கல் கார்டன் என அனைத்து பகுதிகளிலும், ஏராளமானோர் பார்வையிட்டனர். குளுகுளு சூழலும், அவ்வப்போது கடந்து செல்லும் மேகங்களும், சுற்றுலா பயணியரை பரவசப்படுத்தியது.

கரடியூர் காட்சி முனை, லேடீஸ், ஜென்ஸ் சீட்டுகள், சேர்வராயன் கோவில் உள்ளிட்ட பகுதிகளிலும், கூட்டம் நிரம்பியிருந்தது. குளிரான சூழலுக்கு சூடான ஸ்னாக்ஸ் வகைகளும், டீ, காபி விற்பனையும் சுறுசுறுப்பாக நடந்தது. தங்கும் இடங்கள் அனைத்தும் முன்கூட்டியே முன்பதிவு மூலம் பெரும்பாலும் நிரம்பியது.

இதுதவிர சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில், பெண்களுக்கு அடுப்பில்லாத சமையல் போட்டி, குழந்தைகளுக்கு தளிர் நடை போட்டிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து திருக்குறள் கூறும் போட்டி, கலர் பந்து வீசும் போட்டிகளும் நடந்ததால் சுற்றுலா பயணியர் கண்டுகளித்தனர். மேலும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

மலைப்பாதையில் நெரிசல்

கோடை விழாவில் அதிக வாகனங்கள் வரக்கூடும் என்பதால், அடிவாரத்தில் இருந்து செல்லும் பாதை, ஏற்காடு செல்வோருக்கும், குப்பனுார் பாதை, ஏற்காட்டில் இருந்து கீழே இறங்குவோருக்கும் என, ஒரு வழிப்பாதையாக அறிவிக்கப்பட்டது. ஆனால் நேற்று, அடிவாரத்தில் இருந்து ஏற்காடு செல்லும் சாலையில், கீழே இறங்கும் வாகனங்களும் அனுமதிக்கப்பட்டன.

இதனால் மலையில் ஏறும் வாகனங்கள் நெரிசலில் சிக்கி, நீண்ட நேரம் மலைப்பாதையில் நின்று கொண்டிருந்தன. வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டிய சூழல் நிலவியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். பல இடங்களில் போலீசாரே தென்படவில்லை. ஞாயிறான இன்று, இன்னும் கூடுதல் வாகனங்கள் வரும் என்பதால், நெரிசல் ஏற்படாமல் போக்குவரத்தை சீர்படுத்த, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காத்திருந்து

படகு சவாரி

ஏற்காடு ஏரியில் படகு சவாரிக்கு ஏராளமானோர் ஆர்வம் காட்டியதால், காலை முதலே, படகு இல்லம் பிசியாக இருந்தது. அனைத்து படகுகளும் இடைவிடாது இயக்கப்பட்டன. இருப்பினும், 'டிக்கெட்' வாங்கி ஏராளமானோர் அதிகபட்சம், 2 மணி நேரம் வரை காத்திருந்தனர். இதனால் கோடை விழாவை முன்னிட்டு கூடுதல் படகுகளை இயக்க வேண்டும் என, சுற்றுலா பயணியர் கோரிக்கை விடுத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us