ADDED : ஜூன் 07, 2025 01:11 AM
மகுடஞ்சாவடி, அ.புதுார் ஊராட்சி, 6 வது வார்டுக்கு உட்பட்ட செல்லகுட்டிவளவு பகுதியில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த பகுதி மக்கள் பயன்பெற, 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் மின்மோட்டார் பழுது காரணமாக கடந்த, ஆறு மாதங்களாக குடிநீர் பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.
இந்த பகுதி மக்கள், 1 கி.மீ., துாரம் சென்று ஐயனேரி பகுதியில் உள்ள குழாயில் குடிநீர் எடுத்து வருகின்றனர். சிலர் அருகில் உள்ள தோட்டங்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த ஒரு மாதமாக இங்குள்ள, 10 தெருவிளக்குகள் எரிவதில்லை. எனவே சீரான குடிநீர் பெறவும், மின்விளக்கு பழுதை சரி செய்யவும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.