/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஏகலைவா மாதிரி பள்ளியை இடமாற்ற ஏற்காடு மலைக்கிராம மக்கள் எதிர்ப்பு ஏகலைவா மாதிரி பள்ளியை இடமாற்ற ஏற்காடு மலைக்கிராம மக்கள் எதிர்ப்பு
ஏகலைவா மாதிரி பள்ளியை இடமாற்ற ஏற்காடு மலைக்கிராம மக்கள் எதிர்ப்பு
ஏகலைவா மாதிரி பள்ளியை இடமாற்ற ஏற்காடு மலைக்கிராம மக்கள் எதிர்ப்பு
ஏகலைவா மாதிரி பள்ளியை இடமாற்ற ஏற்காடு மலைக்கிராம மக்கள் எதிர்ப்பு
ADDED : ஜூன் 26, 2025 01:58 AM
ஏற்காடு, ஏகலைவா மாதிரி உறைவிடப்பள்ளியை தற்காலிக இடமாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டதால், ஏற்காட்டில் உள்ள உள்ளூர் மாணவ, மாணவியரின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டனர்.
ஏற்காடு, நாகலுாரில் உள்ள அரசு பள்ளியின் ஒரு கட்டடத்தில், அரசு ஏகலைவா மாதிரி உறைவிட பள்ளி, 2018 முதல், 2023 வரை செயல்பட்டது. தொடர்ந்து ஏற்காடு தாலுகா அலுவலகம் அருகே, காலியாக இருந்த அரசு பள்ளி மாணவியர் விடுதிக்கு மாற்றப்பட்டு, அங்கு பள்ளி செயல்படுகிறது. தும்பல், கருமந்துறை, அருநுாற்றுமலை, பச்சமலை, ஜருகுமலை உள்பட பல்வேறு மலைக்கிராமங்களை சேர்ந்த பழங்குடியின மாணவ, மாணவியர், 230 பேர், ஏற்காடு உள்ளூர் மலைக்கிராமங்களை சேர்ந்த, 86 பேர் படிக்கின்றனர். ஆனால் அங்கு அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லாததால், ஏற்காடு, புலியூர் அருகே நிரந்தர பள்ளி கட்டும் பணி நடக்கிறது.
இந்நிலையில் அடிப்படை வசதிகளை காரணம் காட்டி, பள்ளியை தற்காலிகமாக, சேலம் அருகே காரிப்பட்டியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கட்டடத்துக்கு மாற்ற, ஏற்பாடு நடக்கிறது. நேற்று பள்ளியில் உள்ள பொருட்களை, லாரியில் ஏற்றி எடுத்துச்செல்லும் பணியில் பள்ளி நிர்வாகத்தினர் ஈடுபட்டனர்.
இதை அறிந்த, உள்ளுர் மாணவ, மாணவியரின் பெற்றோர், பள்ளியை முற்றுகையிட்டனர். 'இடமாற்றக்கூடாது' என கூறி, வாக்குவாதம் செய்து, ஏற்காட்டிலேயே நடத்த வலியுறுத்தினர். ஏற்காடு போலீசார், பேச்சு நடத்தினர். அப்போது, அ.தி.மு.க.,வின், ஏற்காடு எம்.எல்.ஏ., சித்ரா வந்து விசாரித்தார். தொடர்ந்து கலெக்டர், சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுடன், மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசினார். அவர்களும் பேசி முடிவு எடுக்கலாம் என, பதில் அளித்தனர். இதையடுத்து, மக்கள் கலைந்து சென்றனர்.
தலைமை ஆசிரியர் செல்வராணியிடம் கேட்டபோது, ''புலியூரில் கட்டுமானப்பணி முடிய, 2 முதல், 3 ஆண்டுகள் ஆகும். அதனால் தற்காலிகமாக, காரிப்பட்டிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. புலியூரில் பணி முடிந்ததும், மீண்டும் ஏற்காட்டில் தான் தொடர்ந்து செயல்படும். இதுகுறித்து கடந்த, 2ல், பெற்றோரிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்,'' என்றார்.