ADDED : ஜூன் 13, 2025 01:46 AM
மேட்டூர், வீட்டுமனை பட்டா வழங்காமல் நிறுத்தி வைத்ததாக கூறி, பூமிரெட்டியூர் மக்கள், மேட்டூர், அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நங்கவள்ளி, பெரியசோரகை ஊராட்சி பூமிரெட்டிப்பட்டி குடியிருப்பை சேர்ந்த, 31 பயனாளிகளுக்கு, 2022ல் அரசு குன்று புறம்போக்கு நிலத்தை, கிராம நத்தமாக மாற்றினர். தொடர்ந்து நேற்று சேலத்தில் நலத்திட்ட உதவி வழங்கும்போது, பட்டா வழங்குவதாக வருவாய் அலுவலர்கள் கூறிய நிலையில், அதை நிறுத்தி வைத்ததாக புகார் எழுந்தது.
இதனால் ஏமாற்றம் அடைந்த, 29 பேர் நேற்று காலை, 9:30 மணிக்கு மேட்டூர் ஆர்.டி.ஓ., குடியிருப்பு எதிரே, 3 ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மேட்டூர் போலீசார், பேச்சு நடத்தி சமாதானப்படுத்தியதால், அவர்கள் கலைந்து சென்றனர்.