/உள்ளூர் செய்திகள்/சேலம்/அட நம்புங்க... இது தாங்க புறநகர் காவல் நிலையங்களாம்!அட நம்புங்க... இது தாங்க புறநகர் காவல் நிலையங்களாம்!
அட நம்புங்க... இது தாங்க புறநகர் காவல் நிலையங்களாம்!
அட நம்புங்க... இது தாங்க புறநகர் காவல் நிலையங்களாம்!
அட நம்புங்க... இது தாங்க புறநகர் காவல் நிலையங்களாம்!
ADDED : ஜூலை 10, 2024 07:13 AM
வாழப்பாடி: புறநகர் காவல் நிலையங்கள் இருந்தும் பராமரிக்கப்படாமல் பயன்பாடின்றி கிடக்கின்றன. இது குற்றச்சம்பவங்களுக்கு வழிவகுப்பதால் மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பேளூர் பஸ் ஸ்டாண்டில் புறநகர் காவல் நிலையம், சில ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்தது. ஆனால் இரு ஆண்டுகளாக பூட்டப்பட்டுள்ளது. அதேபோல் வெள்ளாளகுண்டத்தில், 4 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட, புறநகர் காவல் நிலையம் பராமரிக்கப்படாமல், பாழடைந்த கட்டடமாக மாறி உள்ளது. மேலும் வாழப்பாடி பஸ் ஸ்டாண்டில் அமைக்கப்பட்ட போலீஸ் உதவி மையமும் செயல்படாமல் பூட்டியே உள்ளது. இதனால் கொள்ளை, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் நடக்க வழிவகுக்கின்றன. புறநகர் காவல் நிலையங்கள், காவல் உதவி மையத்தை செயல்படுத்த, அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், ''புறநகர் காவல் நிலையங்கள், காவல் உதவி மையம் ஆகியவற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
பாதுகாப்பு இல்லை
குறிச்சி, புழுதிக்குட்டை, சந்திரபிள்ளை வலசு, ஆலடிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், 10-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளுக்கு மையமாக பேளூர் உள்ளது. இதனால் சுற்றியுள்ள ஊராட்சிகளில் இருந்து தினமும் ஏராளமானோர் பேளூர் வந்து செல்கின்றனர். அப்பகுதி மக்கள், பயணியர் பாதுகாப்புக்கு பேளூர் பஸ் ஸ்டாண்ட் முன், புறநகர் காவல் நிலையம் அமைக்கப்பட்டது. இதனால் பேளூர் சுற்றுப்பகுதிகளில் நடக்கும் பிரச்னைகளுக்கு, போலீஸ் உடனே செல்லவும், மக்கள் தகவல் கொடுக்கவும் வசதியாக இருந்தது. இரு ஆண்டுகளாக புறநகர் காவல் நிலையம் பூட்டப்பட்டுள்ளதால் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.- எஸ்.சரவணகுமார், 28,தனியார் நிறுவன ஊழியர், புழுதிக்குட்டை.
தொடரும் நெரிசல்
வாழப்பாடி பஸ் ஸ்டாண்டுக்கு தினமும் ஏராளமான பயணியர் மட்டுமின்றி வாகனங்களிலும் பலர் வந்து செல்கின்றனர். இதனால் பஸ் ஸ்டாண்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க, காவல் உதவி மையம் அமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது. 3 ஆண்டுகளாக போலீசார் இல்லாமல் பூட்டப்பட்டுள்ளது. இதனால் பயணியரிடம் நகை, பணம் பறிப்பு மட்டுமின்றி, பஸ் ஸ்டாண்டில் சாலையோரம் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல், தகராறு போன்ற சம்பவங்கள் தொடர்கின்றன. அப்பகுதியில் போலீசார் இல்லாததால் பயணியர், தகவல் தெரிவிக்க முடிவதில்லை. இதனால் காவல் உதவி மையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.- கி.துரைபாபு, 26,கூலித்தொழிலாளி, வாழப்பாடி.
பாழடைந்த கட்டடம்
வாழப்பாடி போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் வெள்ளாளகுண்டம் உள்ளது. ஆனால் ஸ்டேஷனில் இருந்து, 13 கி.மீ.,ல் இப்பகுதி உள்ளது.இதனால் அப்பகுதியில் இருந்து மக்கள் புகார் கொடுக்கவே, இரு பஸ் ஏறி வாழப்பாடி ஸ்டேஷனுக்கு வந்து செல்ல வேண்டியிருந்தது. இதனால் வெள்ளாளகுண்டத்தில், 4 ஆண்டுக்கு முன் புறநகர் காவல் நிலையம் அமைக்கப்பட்டது. பின் பயன்பாடின்றி பூட்டியே இருந்ததால் தற்போது பாழடைந்த கட்டடமாக மாறிவிட்டது. அங்கு இரு மதுக்கடைகள் உள்ளதால், 'குடி'மகன்களை கட்டுப்படுத்த, புறநகர் காவல் நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
- பி.ராஜா, 48,விவசாயி, வெள்ளாளகுண்டம்.