ADDED : பிப் 06, 2024 09:51 AM
போதையில் விவசாயியை
தாக்கிய டிரைவர் கைது
வாழப்பாடி அடுத்த மேட்டுப்பட்டி அருகே ராஜீவ்நகரை சேர்ந்த கார்த்திக், 42, விவசாயி. இவரையும், இவரது உறவினர் செம்மலை என்பவரையும், வெள்ளாளகுண்டம் பிரிவு ரோடு அருகே, நேற்று முன்தினம் மாலை மேட்டுப்பட்டியை சேர்ந்த டிரைவர் மோகன்ராஜ், இவரது நண்பர்கள் வெள்ளாளகுண்டத்தை சேர்ந்த சதீஷ், அஜித் ஆகியோர் மது போதையில் தகராறில் ஈடுபட்டு தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த கார்த்திக், வாழப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வாழப்பாடி போலீசார் வழக்கு பதிந்து மோகன்ராஜ், 25, என்பவரை நேற்று கைது செய்து விசாரிக்கின்றனர்.
விழாவுக்கு சென்ற முதியவர்
கிணற்றில் சடலமாக மீட்பு
கோவில் திருவிழாவுக்கு சென்ற முதியவர், கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.
ஓமலுார் அருகே குப்பூர் காட்டூரை சேர்ந்த குப்புசாமி, 66, ஓய்வு பெற்ற மேக்னசைட் தொழிலாளி. இவர் கடந்த, 2ல், குப்பூர் கோவில் பண்டிகைக்கு சென்றுள்ளார். பின் வீட்டுக்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில், நான்கு நாட்களுக்கு பின் நேற்று, குப்புசாமி தனது வீட்டுக்கு அருகே உள்ள கிணற்றில், இறந்து மிதந்த நிலையில் கிடப்பதாக, ஓமலுார் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
காடையாம்பட்டி தீயணைப்பு வீரர்கள் உடலை மீட்டனர். குடிபோதையில் வீட்டுக்கு செல்லும் வழியில் தடுப்புச்சுவர் இல்லாத கிணற்றில், குப்புசாமி தவறி விழுந்து இறந்திருக்கலாம் எனவும், இதுகுறித்து விசாரணை நடைபெறுவதாக போலீசார் தெரிவித்தனர்.
மொபட் மீது வேன் மோதிஆறு வயது சிறுவன் பலி
மொபட் மீது, மினி சரக்கு வேன் மோதியதில், ஆறு வயது சிறுவன் உயிரிழந்தார்.
ஆத்துார் அருகே, வளையமாதேவி கிராமத்தை சேர்ந்தவர் தேவேந்திரன், 30. டிராக்டர் டிரைவரான இவரது ஆறு வயது மகன் அஸ்வந்துக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால், மாமனார் சேகருடன், மனைவி பானுபிரியா, ஆறு வயது மகனை 'டிவிஎஸ் - எக்ஸ்.எல்., சூப்பர்' மொபட்டில், வளையமாதேவியில் இருந்து, ஆத்துார் நோக்கி சென்றனர். நேற்று மாலை, 5:30 மணியளவில் பெரியபனந்தோப்பு சென்றபோது, ஆத்துாரில் இருந்து, வளையமாதேவி நோக்கி வந்த மினி சரக்கு வேன், மொபட் மீது மோதியது.
இந்த விபத்தில் துாக்கி வீசப்பட்ட சேகர், 55, பானுபிரியா, 25, ஆறு வயது சிறுவன் ஆகியோர் படுகாயமடைந்தனர். இவர்களை மீட்டு ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில், அஸ்வந்த் உயிரிழந்தார். சேகர், பானுபிரியா சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆத்துார் ஊரக போலீசார் வழக்கு பதிவு செய்து, மினி சரக்கு வேனை நிறுத்திவிட்டு தலைமறைவான டிரைவரை தேடி வருகின்றனர்.
தி.மு.க.,தேர்தல் அறிக்கை குழுவரும் 9ல் சேலம் வருகை
சேலம் மத்திய மாவட்ட தி.மு.க., செயலர் வக்கீல் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
லோக்சபா தேர்தலுக்காக, தி.மு.க., தேர்தல் அறிக்கை தயாரிக்க, துணை பொதுச் செயலர் கனிமொழி எம்.பி., தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் வரும், 9 காலை, 9:00 மணியளவில் சேலம் மாமாங்கம், ரேடிசன் ஓட்டலுக்கு வருகை தருகின்றனர். அப்போது பல்வேறு தரப்பினரை சந்தித்து, தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து கோரிக்கை மனு பெறுகின்றனர்.
எனவே, மாவட்டத்தை சேர்ந்த தொழில் துறையினர், வியாபாரிகள், கல்வியாளர்கள், விவசாயிகள், சிறு,குறு தொழில் முனைவோர், புலம்பெயர் தொழிலாளர்கள், மாணவர் சங்கம், சூழலியலாளர்கள், மருத்துவர், வணிகர் சங்கங்கள், சமூக ஆர்வலகள், தொண்டு நிறுவனத்தினர் உள்பட அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை மனுவாக வழங்கிடலாம்.
இவ்வாறு கூறியுள்ளார்.
சேலத்தில் புல்லட் திருட்டு
சேலம், இரும்பாலை அருகே பெத்தாம்பட்டியை சேர்ந்த சித்தன் மகன் மணிகண்ட பாரதி, 36. இவர் தனது ராயல் என்பீல்டு புல்லட்டை, கடந்த, 3 இரவு, 10:00 மணிக்கு வீட்டின் முன் நிறுத்தி விட்டு, மறுநாள் காலையில் பார்த்த போது பைக்கை காணவில்லை. இது குறித்து இரும்பாலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாற்றுத்திறனாளிகள்கணக்கெடுப்பு தீவிரம்
சேலம் பழைய பஸ் ஸ்டாண்டில், மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு விழிப்புணர்வு பிரசார வாகனத்தை, கலெக்டர் பிருந்தாதேவி நேற்று தொடங்கி வைத்தார்.
அதன்பின் அவர் கூறியதாவது:
தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்க பணியாளர்களால், கடந்த டிச.,4ல், மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு தொடங்கி நடந்து வருகிறது. அரசின் திட்டங்கள் எளிதில் பெறவும், அவர்களுடைய முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு, சமூகத்தரவு தளத்தை உருவாக்க, கணக்கெடுப்பு நடக்கிறது. அதன் மூலமாகவே, அவர்களுடைய எதிர்கால முன்னேற்றம் மறுவாழ்வு பணிகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும். இது தொடர்பாக, சேலம் கலெக்டர் அலுவலகம் அறை எண், 11ல் உள்ள மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தை நேரில் அணுகலாம். மேலும், 0427 - 2415242, 94999 - 33489 என்ற எண்ணில் பேசலாம். இவ்வாறு கூறினார்.
இடைப்பாடியில் போலீசை தாக்கியவர் அதிரடி கைது
இடைப்பாடி அருகே தேவூர், புள்ளாக்கவுண்டம்பட்டி அக்ரஹாரத்தை சேர்ந்தவர் ஆனந்தன், 42. இவர் நேற்று முன்தினம் இரவு, குடிபோதையில் அப்பகுதியில் உள்ளவர்களிடம் தகராறு செய்து வந்தார். தேவூர் எஸ்.எஸ்.ஐ., மதியழகன், ஏட்டு மயில்சாமி ஆகிய இருவரும் நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு தகராறில் ஈடுபட்டிருந்த ஆனந்தனை, எச்சரிக்கை செய்ததோடு வீட்டுக்கு செல்லுமாறு கூறியுள்ளனர். அப்போது தகாத வார்த்தை பேசிய ஆனந்தன், எஸ்.எஸ்.ஐ., மதியழகன், ஏட்டு மயில்சாமி ஆகியோரை கன்னத்தில் அடித்து கீழே தள்ளியுள்ளார்.
தேவூர் போலீசார் வழக்கு பதிந்து, ஆனந்தனை கைது செய்தனர். போலீசை தாக்கிய ஆனந்தன், கடந்த, 2008ம் ஆண்டு கொலை வழக்கில் சேலம் விரைவு நீதிமன்றம் அவருக்கு, 2009 ஜூலை 28ல் ஆயுள் தண்டனை, 10 ஆயிரம் ரூபாய் அபராம் விதித்தது. சிறை தண்டனை அனுபவித்து சமீபத்தில் சிறையில் இருந்து வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கார் மோதிய விபத்தில்
ஓய்வு ஆசிரியர் பலி
வாழப்பாடி அடுத்த, பெரியகிருஷ்ணாபுரம் அருகே மத்துார் காலனியை சேர்ந்த முருகன், 74, ஓய்வு பெற்ற தொடக்கப்பள்ளி ஆசிரியர். இவர் நேற்று அதிகாலை, 5:00 மணியளவில், மத்துார் அருகே சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது, ஆத்துார் நோக்கி வந்த 'பார்ச்சூனர் கார், முருகன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த முருகன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
முருகன் மனைவி அல்லியம்மாள் கொடுத்த புகார்படி, ஏத்தாப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
காஸ் ஆட்டோ பர்மிட்டிரைவர் திடீர் தர்ணா
சேலம், அழகாபுரம் காட்டூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் யுவராஜ், 35. கோரிக்கை பதாகையுடன், நேற்று கலெக்டர் அலுவலகம் வந்த இவர், திடீரென கலெக்டர் கார் முன்பாக அமர்ந்து தர்ணா செய்தார். அவரை சமாதானப்படுத்தி விசாரித்தபோது, போலீசாரிடம் கூறியதாவது:
உடல்நிலை பாதிக்கப்பட்ட நான், சமீபத்தில் காஸ் ஆட்டோ வாங்கினேன். அதற்கு பர்மிட் கேட்டு, மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பித்தேன். ஆனால், இதுவரை பர்மிட் வழங்காமல் அலைகழித்து வருகின்றனர். முறையாக பதிலளிக்காமல், அவதுாறு பேசுகின்றனர். இதைவிட்டால் எனக்கு வேறு தொழில் கிடையாது. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், உரிய நடவடிக்கை எடுத்து பர்மிட் வழங்கிட உதவிட வேண்டும்.
இவ்வாறு கூறினார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
பெரியார் பல்கலையில்சொற்பொழிவு
சேலம், பெரியார் பல்கலை பொருளியல் துறை சார்பில், தங்கம்மாள் அறக்கட்டளை மூலம், 'இந்தியாவில் கூட்டுறவு இயக்கத்தின் சமீபத்திய போக்குகள்' என்ற தலைப்பில் சொற்பொழிவு அத்துறைத்தலைவர் ஜெயராமன் தலைமையில் நடந்தது. தமிழ்நாடு சமூக நீதி கண்காணிப்பு குழு உறுப்பினர் ராஜேந்திரன் சொற்பொழிவாற்றினார். பேராசிரியர் வைத்தியநாதன் உட்பட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
கணினி ஆசிரியர்கள் சம்பளம் பெற
6 மாதத்துக்கு பணி நீட்டிப்பு ஆணை
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் கணினி ஆசிரியர்களுக்கு, மேலும் ஆறு மாதங்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கி, ஊதிய கொடுப்பாணை வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கடந்த, 2019ல், 1,880 கணினி ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டன. இவற்றில் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு மூன்றாண்டுகளுக்கு, பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. அதன்பின் கடந்த டிசம்பர் வரை, ஊதிய கொடுப்பாணை வழங்கப்பட்டிருந்தது. இதனால், ஜனவரி மாதத்துக்கான சம்பளத்தை ஆசிரியர்கள் பெற முடியவில்லை.
மேலும் ஜனவரி முதல் ஜூன் வரை ஆறு மாதங்களுக்கு ஊதிய கொடுப்பாணை வழங்கி, பள்ளிக்கல்வித்துறை குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம், சில தினங்களில், கணினி ஆசிரியர்களுக்கு ஜனவரி மாத சம்பளம் வழங்கப்படும் என தலைமை ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
நாகப்பட்டினத்தில்
சேலம் ரவுடி கைது
சேலம், அம்மாபேட்டை, முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபி, 37. அம்மாபேட்டை போலீஸ் ஸ்டேஷனின் ரவுடி பட்டியலில் இடம் பெற்றுள்ள இவரை, 2009ல், நடந்த இரட்டை கொலை வழக்கில் கைது செய்தனர். ஜாமினில் வெளியே வந்த இவர், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் நாகப்பட்டினத்தில் பதுங்கி இருந்தார். நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது.
அவரை கைது செய்ய அம்மாபேட்டை இன்ஸ்பெக்டர் பால்ராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. விசாரணை நடத்திய போலீசார், நாகப்பட்டினத்தில் பதுங்கி இருந்த அவரை நேற்று கைது செய்து சேலம் அழைத்து வந்தனர்.
* சேலம், அய்யந்திருமாளிகையை சேர்ந்தவர் சசிகுமார், 33. இவரை அழகாபுரம் போலீசார், கடந்த ஆண்டு அக்டோபரில் கொலை முயற்சி வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமினில் வெளியே வந்த அவர், நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாததால், வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் போலீஸ், நீதிமன்றத்துக்கு டிமிக்கி கொடுத்து விட்டு தலைமறைவாக இருந்தார். அவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
'ஜிவி' மேல்நிலைப்பள்ளியில்
பெற்றோர் போற்றுதும் நிகழ்வு
மேட்டூர், 'ஜிவி' மேல்நிலைப்பள்ளியில், பெற்றோர் போற்றுதும் நிகழ்வு நடந்தது.
மேட்டூர் 'ஜிவி' மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2, 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் விரைவில் அரசு இறுதி தேர்வு எழுத உள்ளனர். அவர்கள் தேர்வு சிறப்பாக எழுத, இறையருள் வேண்டி நேற்று முன்தினம் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் பங்கேற்ற ஹயகீரிவர் ேஹாமம் காலை, 9:30 மணிக்கு 'பெற்றோர் போற்றுதும்' நிகழ்ச்சி நடந்தது.
தலைமை ஆசிரியர் ராஜலிங்கம் வரவேற்றார். பள்ளி தாளாளர் அன்பழகன், 'அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம்.' என பேசினார். பள்ளி அறக்கட்டளை தலைவர் பிச்சைமுத்து, 'பெற்றோர் பாதம் பணிதல்' சிறப்பு குறித்தும் மற்றும் பள்ளி செயலாளர் அமல்ராஜ் பெற்றோர் முன்னிலையில் பேசினர்.
பின்பு, மாணவ, மாணவியர் பெற்றோர்களுக்கு பாதபூஜை செய்து அவர்களின் ஆசி பெற்றனர். நிகழ்ச்சியில், பிளஸ் 2, 10ம் வகுப்பு மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் பங்கேற்றனர்.
எஸ்.எஸ்.ஐ., சுருண்டு
விழுந்து சாவு
சேலம், பள்ளிப்பட்டியை சேர்ந்தவர் பால்ராஜ், 57. இவர், சேலம் மாநகர வடக்கு போக்குவரத்து பிரிவில் எஸ்.எஸ்.ஐ.,யாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் அயோத்தியாபட்டணத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்ற அவர், அங்கு நடை பயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது அவர் சுருண்டு விழுந்துள்ளார்.
உறவினர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்த நிலையில், அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவரின் உடலுக்கு போலீசார், அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
கல்பகனுாரில் இரு தரப்பு
மோதல்; போலீசார் குவிப்பு
சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே, கல்பகனுாரில் ஒரு தரப்பை சேர்ந்த வாலிபர், மற்றொரு தரப்பு குறித்த தகவலை, இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
இதனால், இருதரப்பினர் இடையே, நேற்று இரவு, 9:00 மணியளவில் தகராறு ஏற்பட்டது. பின், ஒருவரை ஒருவர் கற்கள் வீசி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதில், பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்களை, ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பாதுகாப்பு பணியிலிருந்த வீரகனுார் ஏட்டு முருகவேல், ௪௦ என்பவரின் மண்டை உடைந்தது.
தகவலறிந்த ஆத்துார் ஆர்.டி.ஓ., ரமேஷ், தாசில்தார் வெங்கடேசன் மற்றும் ஆத்துார் ஊரக போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். தொடர்ந்து, 50க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவத்தால், கல்பகனுார் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
'அ.தி.மு.க., ஆட்சியில் அறிவித்ததிட்ட பணிகள் கிடப்பில் உள்ளன'
கெங்கவல்லி தொகுதி, அ.தி.மு.க., சார்பில் நேற்று தெடாவூரில், தெருமுனை பிரசார கூட்டம் கெங்கவல்லி எம்.எல்.ஏ., நல்லதம்பி தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில், சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் பேசியதாவது:
அ.தி.மு.க., ஆட்சியின்போது, கெங்கவல்லி தொகுதியில்தான், அதிகளவில் பாலம், சாலை திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தெடாவூரில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க, முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவிட்டார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், இத்திட்டத்தை செயல்படுத்தவில்லை. மறைந்த முதல்வர் ஜெயலலிதா, கெங்கவல்லி, தெடாவூர், வீரகனுார் டவுன் பஞ்சாயத்துகளுக்கு, காவிரி குடிநீர் திட்டத்தை செயல்படுத்தினார்.
ஆனால், தி.மு.க., ஆட்சியில் சீரான குடிநீர் வினியோகம் செய்யாததால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்ற, தி.மு.க., எம்.பி., கவுதமசிகாமணியை, மக்கள் மறந்துவிட்டனர். வளர்ச்சி திட்டம், தொழில் போன்றவைகள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. இத்தேர்தலில், தி.மு.க.,வை 'டிபாசிட்' இழக்கச் செய்திட வேண்டும்.
இவ்வாறு பேசினார்.