Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/செய்திகள் சில வரிகளில்... சேலம்

செய்திகள் சில வரிகளில்... சேலம்

செய்திகள் சில வரிகளில்... சேலம்

செய்திகள் சில வரிகளில்... சேலம்

ADDED : ஜன 25, 2024 09:49 AM


Google News
பெண் குழந்தை பாதுகாப்பு

விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஆத்துார், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், நேற்று பெண் குழந்தை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி, தலைமை ஆசிரியை பொன்முடி தலைமையில் நடந்தது.

இதில், மனித உரிமை கல்வி நிறுவன மண்டல அமைப்பாளர் ராமு, தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு மாவட்ட அமைப்பாளர் ஜெகதாம்பாள், குழந்தைகள் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் கவிதா ஆகியோர் பெண் கல்வி, பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம், மன அளவில் ஏற்படும் பாதிப்பு, குழந்தை திருமண தடை சட்டம், குழந்தை தொழிலாளர் சட்டம் குறித்து பேசினர்.

தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு குறித்து, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

திருமணம் நடக்கவிருந்த நிலையில்

நள்ளிரவில் மணமகள் ஓட்டம்

சேலத்தில், நேற்று காலை திருமணம் நடக்க இருந்த நிலையில், நள்ளிரவில் மணமகள் ஓட்டம் பிடித்தார். சேலம், கருங்கல்பட்டியை சேர்ந்தவர் சதீஷ்குமார், 30. இவருக்கும், 19 வயதை சேர்ந்த பெண் ஒருவருக்கும் நேற்று காலை, சுகவனேஸ்வரர் கோவிலில் திருமணமும், தொடர்ந்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் விருந்தும் நடக்க இருந்தது. இதற்காக, இரு வீட்டின் உறவினர்களும் திருமண மண்டபத்தில் தங்கி இருந்தனர். நள்ளிரவு, 1:00 மணிக்கு மணமகள் மண்டபத்தில் இருந்து வெளியேறி மாயமானார்.

நேற்று காலை, மணமகள் அழைப்பு இருந்த நிலையில், பெண் மாயமானது தெரிய வந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அளித்த புகார்படி, சேலம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோபுர கலசம் திருட்டு

சேலம், அஸ்தம்பட்டி, மணக்காடு விநாயகர் கோவில் கோபுரத்தில் உள்ள, 5,000 ரூபாய் மதிப்புள்ள வெண்கல கலசத்தை கடந்த, 19 நள்ளிரவில் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து கோவில் நிர்வாகி ஜெயப்பிரகாஷ், நேற்று முன்தினம் அளித்த புகார்படி, அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்திய மருத்துவ சங்க

நிர்வாகிகள் பொறுப்பேற்பு

ஆத்துாரில், இந்திய மருத்துவ சங்க புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்று கொண்டனர்.

ஆத்துாரில், இந்திய மருத்துவ சங்க கிளை சார்பில், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்தல் கூட்டம், மாநில தலைவர் அபுல்ஹாசன் தலைமையில் நடந்தது. இதில் தலைவராக வேல்

முருகன், செயலர் ஜோஸ்பின் அரோக்கியாமார்டினா, செயலர் (நிதி) பன்னீர்செல்வம், துணை தலைவர் சத்யபிரியா, துணை செயலர் ஹரிவிஷ்ணு, மத்திய பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெகநாதன், லதா, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பாலு, ரபீந்தரநாத், சிவபிரகாசம், சத்யப்ரியா, கிருபாசங்கர், பல்லவி, செயற்குழு உறுப்பினர்கள் மல்லிகா, ஜெயராமன், மாதவன், ரத்தினகுமார், அருண், செல்விகுமுதம், ஸ்ரீப்ரியா, மலர்கொடி உள்பட, 21 பேர் பொறுப்பேற்று கொண்டனர்.

மூதாட்டி உடல்

அழுகிய நிலையில் மீட்பு

சேலம், அழகாபுரம் நகரமலை அடிவாரத்தில், அழுகிய நிலையில், மூதாட்டி உடல் கிடப்பதாக கடந்த, 21ல் அழகாபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், மயிலாடுதுறை மாவட்டம் சிலுவன்காடு, ஐயப்பா நகரை சேர்ந்த தனம், 78, என்பதும், கடந்த, 19ல் தனது மகன் சுந்தரமூர்த்தியுடன், சேலம் தனியார் மருத்துவக் கல்லுாரியில் பயிற்சி டாக்டராக பணியாற்றும் பேரனை பார்க்க வந்துள்ளார். பஸ் ஆத்துாரில் நின்ற நிலையில், இயற்கை உபாதை கழிக்க சென்ற அவர் மாயமாகி விட்டார். இது குறித்து ஆத்துார் டவுன் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், சேலத்தில் பிணமாக அவரின் உடல் மீட்கப்பட்டது. ஆத்துாரில் இருந்து சேலம் எப்படி வந்தார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ரூ.93.70 லட்சம் மதிப்பில்

கட்டடம் கட்டும் பணி துவக்கம்

சேலம் மாநகராட்சி, அஸ்தம்பட்டி மண்டலம், 5 வது வார்டு, அழகாபுரம் புதுார் மாநகராட்சி துவக்கப்பள்ளி வளாகத்தில், 35 லட்சம் ரூபாய் மதிப்பில், 2 கூடுதல் வகுப்பறை கட்டடம், 12 வது வார்டு, மணக்காடு மாநகராட்சி பள்ளி வளாகத்தில், 35 லட்சம் ரூபாய் மதிப்பில், 2 கூடுதல் வகுப்பறை கட்ட கல்வி நிதியில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், 13 வது வார்டு மணக்காடு

மாரியம்மன் கோவில் தெருவில், 15வது மாநில நிதிக்குழு மூலம், 23.70 லட்சம் மதிப்பில் மழைநீர் வடிகால் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இப்பணிகளை, நேற்று மேயர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.

ரேஷன் அரிசி

கடத்தியவர் கைது

இளம்பிள்ளை, தளவாய்ப்பட்டி பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக, உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.ஐ., பெரியசாமிக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி, சேலம், தளவாய்ப்பட்டியில் உள்ள அஜய்ஸ்ரீ, 22. வீட்டில் சோதனை செய்தனர். அப்போது, 22 மூட்டைகளில் இருந்த, 1.100 டன் ரேஷன் அரிசி, அவற்றை கடத்த பயன்படுத்தப்பட்ட டி.வி.எஸ்., எக்சல் சூப்பர் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட அஜய்ஸ்ரீயை கைது செய்து விசாரிக்கின்றனர்.

திறந்த வெளியில் துாங்கிய

எலக்ட்ரீஷியன் சாவு

சேலம் அருகே, வீட்டின் வெளியே குளிரில் படுத்து துாங்கிய எலக்ட்ரீஷியன் இறந்தார்.

சேலம், கருப்பூர் அருகே செங்கரட்டை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் கார்த்தி, 29, எலக்ட்ரீஷியன். இவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். கடந்த, 22 இரவு வீட்டின் வெளியே திறந்த வெளியில் படுத்து துாங்கி உள்ளார். நேற்று முன்தினம் அதிகாலை கடும் குளிர் காரணமாக அவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது.

உறவினர்கள் அவரை மீட்டு, வெள்ளாளப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்கு பின், சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். கருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலத்தில் தேசப்பற்று

உணர்வு ஓட்டம்

சேலத்தில், தனியார் பொறியியல் கல்லுாரியின் நாட்டு நலப்பணி திட்ட சங்கம், டெல்லியை சேர்ந்த வெட்டரன்ஸ் இந்தியா அமைப்பு சார்பில், குடியரசு தினம் மற்றும் தேசப்பற்று உணர்வு ஓட்டம், நேற்று நடந்தது.

கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில், ஓய்வுபெற்ற கர்னல் ராமன் ஆர்.ராவ் கொடியசைத்து வைத்து, உணர்வு ஓட்டத்தை தொடங்கி வைத்தார். திருவள்ளுவர் சிலை, கோட்டை மைதானம், லைன்மேடு வழியாக உணர்வு ஓட்டம், மாநகர் போலீஸ் கமிஷனர் அலுவலக பகுதியில் நிறைவடைந்தது. போலீஸ் உதவி கமிஷனர் வெங்கடேசன் நிறைவு செய்து வைத்தார்.

தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்க, முழக்கங்களை எழுப்பி, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியபடி, ஓட்டம் நடந்தது. கல்லுாரி மாணவர்கள், ஆசிரியர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

வீர வணக்க நாள் பொதுக்கூட்டம்

அமைச்சர் நேரு இன்று வருகை

சேலம் மத்திய மாவட்ட, தி.மு.க.,செயலர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை:

மத்திய மாவட்ட, தி.மு.க., மற்றும் மாணவரணி சார்பில், மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் சேலத்தில் இன்று, (25ல்,) நடக்கிறது. கோட்டை மைதானத்தில் மாலை, 6:00 மணிக்கு நடக்கும் கூட்டத்துக்கு செவ்வாய்பேட்டை பகுதி செயலர் பிரகாஷ் வரவேற்கிறார். மாவட்ட செயலர் ராஜேந்திரன் தலைமை வகிக்கிறார். நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, முன்னாள் மத்திய அமைச்சரும், எம்.பி.,யுமான பழனி மாணிக்கம், மாநில மாணவரணி துணை செயலர் தமிழரசன், அவைத்

தலைவர் சுபாஷ், பொருளாளர் கார்த்திகேயன் உள்பட பலர் பேசுகின்றனர்.

செவ்வாய்பேட்டை பகுதி தி.மு.க., மற்றும் மாணவரணி நிர்வாகிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

நெடுஞ்சாலைத்துறை சார்பில்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

நெடுஞ்சாலைத்துறை சார்பில், சங்ககிரி தனியார் கல்லுாரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

பாதுகாப்பு அலகு கோட்ட பொறியாளர் குமுதா, நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில், சாலை பாதுகாப்பு குறித்த விளக்க காட்சிகளுடன், ஒரு மாணவி தன்னுடைய இல்லத்திலிருந்து, கல்லுாரி வரும் வரை பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு விதிகள், வாகன உரிமம் இல்லாமல் வாகனம் இயக்கினால் ஏற்படும் விளைவுகள், தமிழகத்தில் விபத்துகளால் ஏற்படும் மரணங்கள், அதை குறைப்பதற்கான வழிகள் உள்ளிட்டவை குறித்து உதவி கோட்ட பொறியாளர் ராமநாதன் விளக்கினார்.

சங்ககிரி உதவி கோட்ட பொறியாளர் சுதா தலைமையில், சாலை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. உதவி பொறியாளர்கள் சிவகுமார், நந்தினி, கீர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us