Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/செய்திகள் சில வரிகளில்... சேலம்

செய்திகள் சில வரிகளில்... சேலம்

செய்திகள் சில வரிகளில்... சேலம்

செய்திகள் சில வரிகளில்... சேலம்

ADDED : ஜன 01, 2024 11:11 AM


Google News
குழந்தை பலிசேலம், செவ்வாய்ப்பேட்டையை சேர்ந்த, பவர்லால் - மீனா தம்பதியருக்கு, 3 குழந்தைகள் உள்ளனர். இரண்டாவது மகள் மெஹக், 2. இவரை, நேற்று மதியம், 1:30 மணிக்கு துாரி வகை சேரில் இரு பெல்ட் போட்டு, அதில் அமர வைத்து விட்டு, மீனா சென்றார். குழந்தை இறங்க முயன்று ஒரு பெல்ட்டை கழற்றியபோது, மற்றொரு பெல்ட் கழுத்தை சுற்றி மாட்டியதால் மயங்கி விழுந்தார். உடனே குழந்தையை துாக்கிக்கொண்டு, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மீனா கொண்டு சென்றார். ஆனால் குழந்தை இறந்துவிட்டதாக, மருத்துவர்கள் தெரிவித்தனர். செவ்வாய்ப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

மருத்துவ முகாம்

ஏற்காட்டில் உள்ள சவால் அறக்கட்டளை தொடங்கி, 4 ஆண்டு நிறைவால் ஊராட்சி அலுவலகம் அருகே உள்ள சமுதாய கூடத்தில், தனியார் மருத்துவமனையுடன் இணைந்து இலவச மருத்துவ முகாமை நடத்தியது. அறக்கட்டளை நிறுவனர் ஜெயந்தி திசாநாயகம் தலைமை வகித்தார்.

அதில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம், மத்திய அரசு காப்பீடு திட்ட பயன்கள் குறித்து, மருத்துவ குழுவினர் விளக்கம் அளித்தனர்.

தொடர்ந்து நடந்த முகாமில், 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனை, சிகிச்சை பெற்றனர். அ.தி.மு.க., மாணவர் அணி ஒன்றிய செயலர் புகழேந்தி, தனியார் மருத்துவமனை இயக்குனர் பிரபுசங்கர் உள்பட பலர் பங்கேற்றனர்.

பிரதமர் பாதுகாப்புக்கு

250 போலீசார் பயணம்

திருச்சி பாரதிதாசன் பல்கலை பட்டமளிப்பு விழா உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி நாளை பங்கேற்க உள்ளார்.

இதன் பாதுகாப்பு பணிக்கு சேலம் வடக்கு துணை கமிஷனர் பிருந்தா தலைமையில், 155 போலீசார், மாவட்டத்தில், 95 போலீசார் என, 250 பேர் நேற்று திருச்சிக்கு புறப்பட்டனர்.

பா.ஜ.,வில் பலர் ஐக்கியம்

வாழப்பாடியில் உள்ள, பா.ஜ.,வின் சேலம் கிழக்கு மாவட்ட அலுவலகத்தில், மாவட்ட தலைவர் சண்முகநாதன், பட்டியல் அணி மாவட்ட துணை தலைவர் முருகன் முன்னிலையில், அ.நா.மங்கலம் அருகே ஏரிப்புதுாரை சேர்ந்த சவுந்தர் தலைமையில், 50க்கும் மேற்பட்டோர் நேற்று, பா.ஜ.,வில் இணைந்தனர்.

அவர்களுக்கு கட்சி துண்டு அணிவித்து வரவேற்றனர். பட்டியல் அணி மாவட்ட தலைவர் பாஸ்கர், பொதுச்செயலர்கள் செல்வராசு, நித்யானந்தம் உள்பட பலர் உடனிருந்தனர்.

அதேபோல், பா.ஜ.,வின் பனமரத்துப்பட்டி கிழக்கு ஒன்றிய அலுவலகத்தில், மாநில தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரை குறித்து நிர்வாகிகள் ஆலோசித்தனர். அப்போது தாசநாயக்கன்பட்டியை சேர்ந்த சந்துரு தலைமையில் பலர், பா.ஜ.,வில் இணைந்தனர். மாநில பொதுக்குழு உறுப்பினர் சின்னுராஜ், ஒன்றிய தலைவர் மோகன்ராஜ், பொதுச்செயலர் தமிழ்நேசன், துணைத்தலைவர் பிரபாகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மது பெட்டி இறக்கு கூலி உயர்வு

சேலம் சந்தியூர், மேற்கு டாஸ்மாக் கிடங்குகளில் மது பெட்டிகளை ஏற்றி, இறக்கும் பணியில் தற்காலிக தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் இறக்கு கூலியை உயத்தி வழங்கக்கோரி போராட்டம் நடத்தி வந்தனர். இதுதொடர்பாக தொழிலாளர்கள், மது ஆலை உரிமையாளர்கள் இடையே நடந்த பேச்சில் கூலி உயர்வுக்கு உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதன்படி ஒரு மது பெட்டிக்கு, 5.50ல் இருந்து, 6.50 ரூபாயாகவும், பெட்டிக்குள் பெட்டிக்கு, 6.50ல் இருந்து, 7.70 ரூபாயாகவும், பீர் பெட்டிக்கு, 4ல் இருந்து, 4.75 ரூபாயாகவும், இறக்கு கூலி உயர்த்தப்பட்டுள்ளது.

அரசியல் பயிற்சி முகாம்

மா.கம்யூ., சார்பில், ஓமலுாரில் அரசியல் பயிற்சி முகாம் நேற்று நடந்தது. தாலுகா செயலர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். அதில் தென் சென்னை நிர்வாகி லெனின், சேலம் மாவட்ட செயலர் சண்முகராஜா, பல்வேறு தலைப்புகளில் பேசினர். இதில், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

ஞானந்தகிரி சுவாமி

ஆராதனை விழா

ஆட்டையாம்பட்டியில் உள்ள ஞானந்தகிரி சுவாமிகள் ஆசிரமத்தில், சென்னையை சேர்ந்த பக்தர்கள், டிசம்பர் இறுதியில் வந்து, சுவாமிகள் பயன்படுத்திய இருக்கை, அவரது பொருட்களை வைத்து சிறப்பு பூஜை செய்து நாமசங்கீர்த்தனம் பஜனை, அன்னதானம் செய்து வருகின்றனர்.

அதன்படி அவரது ஆராதனை விழாவையொட்டி நேற்று, சென்னை பக்தர்கள், சுவாமிகள் படத்தை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வைத்து பஜனை பாடல்களை பாடியபடி முக்கிய வீதிகள் வழியே ஊர்வலம் வந்தனர். மதியம் அவரது சிலைக்கு அபிேஷகம் செய்து, வண்ண

மலர்களால் அலங்கரித்து ஆராதனை விழா நடத்தினர்.

உள்ளூர் பக்தர்களும், நாம சங்கீர்த்தனைகள், பக்தி பாடல்களை பாடி வழிபட்டனர். நிறைவாக அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, ஆசிரம டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

மருத்துவ காப்பீடு பதிவு முகாம்

தாரமங்கலம் நகராட்சியில் ஆயுஷ்மான், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு

திட்டத்தில் சேர்க்கை முகாம் நேற்று நடந்தது. இதில் மத்திய, மாநில அரசு இணைந்து, தனிநபருக்கு,

5 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடு வழங்க, வார்டு

வாரியாக பதிவு செய்தனர். இப்பணியில், தனியார் நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டனர்.

துணை பி.டி.ஓ., மீது புகார்

வரும் 3ல் ஆஜராக கடிதம்

பத்து ரூபாய் இயக்கத்தின் சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட செயலர் பிரபு. இவர் கெங்கவல்லி ஒன்றியத்தில் பணிபுரியும் துணை பி.டி.ஓ., சத்யா(பொது) முறைகேட்டில் ஈடுபட்டதாக, கவர்னர், லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தனித்தனியே புகார் அனுப்பினார். இதுதொடர்பாக விசாரித்து அறிக்கை அளிக்க, ஆத்துார் பி.டி.ஓ.,வுக்கு(கி.ஊ.,), கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டார்.

அதன்படி விசாரணை மேற்கொள்ள, ஜன., 3 காலை, 11:00 மணிக்கு, ஆத்துார் ஒன்றிய அலுவலகத்தில் ஆஜராகும்படி, மனுதாரருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

வாலிபரிடம் 4 பவுன் திருட்டு

சேலம், தாதகாப்பட்டி வழிவாய்க்கால் காளியம்மன் கோவிலில் திருவிழா, பொங்கல் விழா நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் மாலை, 6:00 முதல், 7:00 மணி வரை நடந்தது. இதில் திருச்சி பிரதான சாலையை சேர்ந்த சதீஷ்குமார், 45, பங்கேற்றார். அவர், கூட்டம் முடிந்து வீட்டுக்கு வந்தபோது, அவர் அணிந்திருந்த, 4.4 பவுன் 'பிரேஸ்லெட்' மாயமாகி இருப்பது தெரிந்தது. அவர் புகார்படி, அன்னதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

கூட்டுறவு சங்கத்துக்கு

சொந்த கட்டடம் தேவை

பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில் கம்மாளப்பட்டி, தும்பல்பட்டி, குரால்நத்தம் ஊராட்சிகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். நடப்பாண்டில், மலைவாழ் மக்கள் பல்நோக்கு கூட்டுறவு சங்கம் தொடங்கப்பட்டது. அதில், 800க்கும் மேற்பட்டோர் உறுப்பினராக சேர்ந்துள்ளனர்.

இதுகுறித்து தும்பல்பட்டி மலைவாழ் மக்கள் கூறியதாவது: தும்பல்பட்டி ஊராட்சி அலுவலகத்தின் ஒரு அறையில் கூட்டுறவு சங்கம் செயல்படுகிறது. அங்கு மகளிர் குழுவுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு பயிர் கடன், குறைந்த வட்டியில் நகை கடன் வழங்க வேண்டும். அடகு வைக்கப்படும் நகையை பாதுகாப்பாக வைக்க பாதுகாப்பு பெட்டகம்(லாக்கர்) இல்லாததால் நகை கடன் வழங்குவதில் சிக்கல் உள்ளது. கூட்டுறவு சங்கத்துக்கு தனியே கட்டடம் கட்ட அரசு நிலம் ஒதுக்கி தர வேண்டும். அதுவரை, 'லாக்கர்' வசதியுடன் தனியார் வாடகை கட்டடத்தில் கூட்டுறவு சங்கம் செயல்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மலைக்கிராம மக்களுக்கு தாட்கோ, மாவட்ட தொழில் மையம் மூலம் கடன் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மாற்றுத்திறனாளி கணக்கெடுப்பு

பயன்படுத்திக்கொள்ள அறிவுரை

தமிழக ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்க பணியாளர்கள் மூலம், சேலம் மாவட்டத்தில் கடந்த டிச., 4 முதல், மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது.

அடையாள அட்டை வைத்திருப்பவர், இதுவரை அடையாள அட்டை பெறாதவர்கள், வீடு தேடி வரும் பணியாளர் கோரும் விபரங்களை தயக்கமின்றி வழங்கி, அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும், அரசால் நடத்தப்படும் சமூக தரவுகள் கணக்கெடுப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தகவலுக்கு கலெக்டர் அலுவலக அறை எண்: 11ல் செயல்படும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை அணுகலாம். 0427 - 2415242, 94999 - 33489 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, சேலம் கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us