ADDED : ஜூலை 09, 2024 06:22 AM
மேட்டூர்: மேட்டூர் அணை நீர்வரத்து, 5 நாட்களுக்கு பின்பு நேற்று சரிந்தது.
மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி. நீர் இருப்பு, 93.47 டி.எம்.சி., காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பருவமழை தீவிரம் அடைந்தது. அதேநேரம் கர்நாடகாவின் கபினி அணையில் இருந்து வினாடிக்கு, 4,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. இந்த நீரின் ஒரு பகுதி வந்ததால், மேட்டூர் அணை நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க துவங்கியது. கடந்த, 30ல் வினாடிக்கு, 227 கனஅடியாக இருந்த நீர்வரத்து, ஜூலை 1ல், 1,038 கனஅடி, 4ல், 1,223 கனஅடி, நேற்று முன்தினம், 2,832 கனஅடியாக அதிகரித்தது.
மழை தீவிரம் குறைந்ததால் நேற்று அணை நீர்வரத்து வினாடிக்கு, 2,149 கன அடியாக சரிந்தது. அணையில் இருந்து குடிநீருக்கு, 1,000 கனஅடி நீர் தொடர்ச்சியாக வெளியேற்றப்பட்டது. நீர்திறப்பை விட, வரத்து கூடுதலாக இருந்ததால் கடந்த, 3ல், 39.65 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று, 40.22 அடியாகவும், 11.91 டி.எம்.சி.,யாக இருந்த நீர் இருப்பு நேற்று, 12.20 டி.எம்.சி.,யாகவும் உயர்ந்தது.