Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/'செஸ்' போட்டி நிதி ரூ. 21.18 லட்சம் எப்ப கிடைக்கும்? தமிழக உடற்கல்வி ஆசிரியர்கள் அதிருப்தி

'செஸ்' போட்டி நிதி ரூ. 21.18 லட்சம் எப்ப கிடைக்கும்? தமிழக உடற்கல்வி ஆசிரியர்கள் அதிருப்தி

'செஸ்' போட்டி நிதி ரூ. 21.18 லட்சம் எப்ப கிடைக்கும்? தமிழக உடற்கல்வி ஆசிரியர்கள் அதிருப்தி

'செஸ்' போட்டி நிதி ரூ. 21.18 லட்சம் எப்ப கிடைக்கும்? தமிழக உடற்கல்வி ஆசிரியர்கள் அதிருப்தி

ADDED : ஜூலை 09, 2024 06:22 AM


Google News
சேலம்: தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவியருக்கு நடந்தப்பட்ட செஸ் போட்டிக்கான மொத்தத்தொகை, 21.18 லட்சம் ரூபாய் இது வரை வழங்கப்படவில்லை. இதனால் உடற்கல்வி ஆசிரியர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

தமிழகத்தில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவ, மாணவியரை ஊக்கப்படுத்த, 2023ல், ஆக., - செப்., இடைப்பட்ட காலகட்டத்தில், விளையாட்டு போட்டிகள் நடந்தன. சேலம் மாவட்டத்தில், 11 குறுவள மையம் உள்பட தமிழகம் முழுவதும், 323 மையங்களில் போட்டிகள் நடந்தன. கால்பந்து, ஹாக்கி, கபடி, கூடைப்பந்து உட்பட, 12 வகை பழைய விளையாட்டு போட்டி, ஸ்குவாட், சிலம்பம், பாக்ஸிங், குத்துச்சண்டை, நீச்சல், வாள்சண்டை உள்பட, 12 வகை புது விளையாட்டு போட்டி மற்றும் தடகள போட்டிகள் நடந்தன.

மாநில போட்டி

இளையோர், மூத்தோர், மேல் மூத்தோர் என மூன்று பிரிவாக நடத்தி, அதில் தலா முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டன. அவர்கள் அனைவரும், மாவட்ட போட்டிக்கும், அதில் வெற்றிப்பெறுவோர், மாநில போட்டிக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். இப்போட்டியில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட செஸ் போட்டி மட்டும், ஆக.,11ல், தனி போட்டியாக நடத்தப்பட்டது. தமிழகத்தில், 323 குறுவள மையம், 38 மாவட்டங்களில் செஸ் போட்டி, தனியாக நடத்தி முடிக்கப்பட்டன.

பழைய, புதிய மற்றும் தடகள போட்டிக்கான நிதி ஒதுக்கீடு முழுமையாக பட்டுவாடா செய்யப்பட்ட நிலையில், செஸ் போட்டிக்கான நிதி மட்டும், இன்னும் வழங்கப்படாமல், 11 மாதமாக கிடப்பில் உள்ளது. குறுவள மையம், 323க்கு தலா, 4,825 ரூபாய் வீதம், 15 லட்சத்து 58,475 ரூபாய் இன்னமும் கிடைக்கவில்லை. அதேபோல, 38 மாவட்டத்துக்கு தலா, 14,750 ரூபாய் வீதம், 5 லட்சத்து, 60,500 ரூபாய் வழங்கப்பட வேண்டும்.இதோடு சேர்த்து, செஸ் போட்டிக்கான மொத்தத்தொகை, 21 லட்சத்து,18,975 ரூபாய் வழங்கப்படவில்லை.

செவி சாய்க்கவில்லை

இதுகுறித்து, சேலம் உடற்கல்வி ஆய்வாளர் பிரான்ஸிஸ் கூறுகையில், ''நடத்தி முடித்த செஸ் போட்டிக்கான தொகையை கேட்டு, முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் கவனத்துக்கு எடுத்து செல்லப்பட்டு, தமிழகம் முழுவதும் கடிதம் அனுப்பி உள்ளனர். விரைவில் நிதி ஒதுக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது,'' என்றார்.

தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் சங்கங்களின் மாநில அமைப்பு செயலர் இளங்கோ கூறுகையில், ''செஸ் போட்டிக்கான நிதியை விடுவிக்க கேட்டு, பலமுறை வலியுறுத்தியும், அரசு செவிசாய்க்கவில்லை. இனிவரும் காலங்களில் செஸ் போட்டி நடத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு இடம் தராத வகையில், செஸ் போட்டிக்கான நிதியை உடனடியாக அரசு வழங்க வேண்டும்,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us