Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/மாவட்டத்தில் 1,715 ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம்

மாவட்டத்தில் 1,715 ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம்

மாவட்டத்தில் 1,715 ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம்

மாவட்டத்தில் 1,715 ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம்

ADDED : ஜன 11, 2024 10:57 AM


Google News
சேலம்: தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசு, நேற்று சென்னையில் முதல்வர் வழங்கி தொடங்கி வைத்தார். இதையடுத்து சேலத்திலும் வழங்கப்பட்டது. அதற்கு சீரங்கபாளையம் ரேஷன் கடையில் விழா ஏற்பாடு நடந்தது. கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ரவிக்குமார் வரவேற்றார்.

கலெக்டர் கார்மேகம் தலைமை வகித்து, 10:35 மணிக்கு, நுகர்வோர் பிரியாவுக்கு பொங்கல் பரிசு வழங்கி வினியோகத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள, 1,715 ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு வினியோகம் அடுத்தடுத்து நடந்தன. முன்னதாக காலை, 9:00 மணி முதல், நுகர்வோர், பொங்கல் பரிசு பெற, 'டோக்கன்' முறைப்படி ரேஷன் கடையில் வரிசையில் காத்திருந்தனர். கலெக்டர் தொடங்கி வைத்தபின், வழங்கப்பட்டதால், ஒன்றரை மணி நேரம் வரிசையில் நின்று பொங்கல் பரிசை நுகர்வோர் வாங்கி சென்றனர். இதேநிலை மாவட்டம் முழுதும் நீடித்தது.

விழாவில் கலெக்டர் கார்மேகம் பேசியதாவது:

மாவட்டத்தில், 10.71 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு, 118.85 கோடி ரூபாய் மதிப்பில் பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. தினமும், 250 நுகர்வோர் வீதம் பொங்கல் பரிசு பெறும்படி வீடுதேடி சென்று, 'டோக்கன்' வழங்கப்பட்டு, வரும் 13 வரை, பொங்கல் பரிசு பெறலாம். 6 அடிக்கு குறையாத செங்கரும்பு வழங்கும்படி, பூலாம்பட்டியில், 215 உழவர்களிடம் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டது. அதற்கான தொகை, உழவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுவதால், பயிரிட்ட உழவர்களும் பயன்பெறுவர்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேயர் ராமச்சந்திரன், எம்.பி., பார்த்திபன், எம்.எல்.ஏ., ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

இரவு, 8:30 மணி நிலவரப்படி, 3,15,965 நுகர்வோர் பொங்கல் பரிசை பெற்றுச்சென்றனர். இது, 29.5 சதவீதம். இன்று காலை, 9:00 மணி முதல் வினியோகம் தொடங்குவதால், நேற்றுடன் சேர்த்து, 70 சதவீதம் பொங்கல் பரிசு பட்டுவாடா செய்யப்படும் என, கூட்டுறவு அதிகாரிகள் கூறினர்.

முந்திரி, திராட்சை இல்லை

அ.அமுதா, 42, கூலித்தொழிலாளி, தலைவாசல்: அ.தி.மு.க., ஆட்சியில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, ஏலக்காய், திராட்சை, கரும்பு, 2,500 ரூபாய் வழங்கினர். தி.மு.க., ஆட்சியில், 2023ல் பொங்கல் பரிசு தொகுப்புடன், 1,000 ரூபாய் வழங்கப்பட்டது. தற்போது பொங்கல் வைப்பதற்கு தேவையான முந்திரி, திராட்சை, வெல்லம் வழங்கப்படவில்லை.

மகளிர் தொகையால் மகிழ்ச்சி

எல்.மகேஸ்வரி, 48, இல்லத்தரசி, உடையார்பாளையம், ஆத்துார்: எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு பின், 1,000 ரூபாய் அறிவித்து அரிசி, சர்க்கரை, முழு கரும்பு வழங்கப்பட்டுள்ளது. முந்திரி, திராட்சை, ஏலக்காய், வெல்லம் வழங்காதது ஏமாற்றம். அதேநேரம் பொங்கல் பரிசு தொகுப்புடன் மகளிர் உரிமைத் தொகையும் வழங்கப்பட்டதால் மகிழ்ச்சி அளிக்கிறது.

நிதி நெருக்கடியிலும் சிறப்பு

கனகராஜ், 53, ஒப்பந்ததாரர், மாசிலாபாளையம்: ஐ.டி.ஐ., முடித்து விட்டு மேட்டூர் அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த பணிகளை செய்கிறேன். தமிழக அரசு, நிதி நெருக்கடியில் உள்ள சூழ்நிலையில், 1,000 ரூபாயுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியது சிறப்பு.

விலைவாசிக்கேற்ப இல்லை

கே.செல்வம், 52, ஏரிரோடு, இடைப்பாடி: கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புடன், 1,000 ரூபாய் கொடுத்தார்கள். தற்போது விலைவாசி ஏறிவிட்டது. அதனால், 1,500 ரூபாய் கொடுத்திருந்தால் சந்தோஷம் அளித்திருக்கும். அதுதவிர பொங்கல் வைக்க தேவையான அனைத்து பொருட்களும் கொடுக்காதது அதிருப்தி அளிக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us