Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/நீலகிரி, கோவைக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை

நீலகிரி, கோவைக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை

நீலகிரி, கோவைக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை

நீலகிரி, கோவைக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை

ADDED : ஜூலை 31, 2024 05:21 AM


Google News
Latest Tamil News
சென்னை : நீலகிரி, கோவையில் இன்று(ஜூலை 31) மிக கனமழையும், திருப்பூர், தென்காசி உட்பட ஆறு மாவட்டங்களில், இன்று கனமழையும் பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை மையம் அறிவிப்பு:


நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில், ஓரிரு இடங்களில் இன்று மிக கனமழை பெய்யும். இதன் காரணமாக, இரு மாவட்டங்களுக்கும், 'ஆரஞ்சு அலெர்ட்' விடப்பட்டுள்ளது.

திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யும்.

நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகளில், ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்யும். மற்ற மாவட்டங்களில், மிதமான மழை பெய்யும்.

சென்னையில் வானம் சிறிது மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சம், 37 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை பதிவாகும். நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக, வால்பாறையில், 31 செ.மீ., மழையும், சின்னக்கல்லார், 24; சின்கோனா, விண்ட் வொர்த் எஸ்டேட், 23; பந்தலுார், தேவாலா, 20; சோலையார், 19 செ.மீ., மழையும் பெய்துள்ளது.

அவலாஞ்சி, மேல்கூடலுார், 17; மேல்பவானி, 10; சிறுவாணி, 9; பொள்ளாச்சி, பெரியாறு, 8; ஆழியார், 6; மாஞ்சோலை, 5; செங்கோட்டை, பேச்சிப்பாறை, 4; குழித்துறை, போடி, 3 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

போக்குவரத்து பாதிப்பு


உடுமலை - மூணாறு வழித்தடத்தில், நிலச்சரிவு ஏற்பட்டதால், நேற்று காலை போக்குவரத்து பாதித்தது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில், நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதில், திருப்பூர் மாவட்டம் உடுமலையிலிருந்து, கேரளா மாநிலம் மூணாறு செல்லும் ரோட்டில், எட்டாம் மைல் உள்ளிட்ட பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், இந்த ரோட்டில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

உடுமலையிலிருந்து, மறையூர், மூணாறு செல்லும் பஸ்கள் மற்றும் சுற்றுலா வாகனங்கள், பாதி வழியில் நிறுத்தப்பட்டன. கேரளா மாநில அதிகாரிகள், ரோட்டில் சரிந்த பாறை, மண்ணை அகற்றிய பின், மதியம், 12:00 மணிக்கு மேல், வாகனங்கள் வழக்கம் போல் இயங்கின.

வெள்ளக்காடாக மாறிய பாலக்காடு


பாலக்காடு மாவட்டத்திலும் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால், மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. நெம்மாரா என்ற பகுதியில் நேற்று காலை 6:00 மணிக்கு கனமழை பெய்த போது வீடு இடிந்து விழுந்ததில், பழனியம்மாள், 78, என்ற பெண், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார். காயங்களுடன் தப்பிய அவரது மகள் பாப்பாத்தியை அப்பகுதி மக்கள் மீட்டு, நெம்மாரா மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பாலக்காடு நகரப் பகுதியான சேகரீபுரம், ஒலவக்கோடு, புத்துார், காவில்பாடு ஆகிய பகுதியில் உள்ள காலனிகளில் மழை வெள்ளம் புகுந்தது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர், போலீசார், ஊர் மக்களுடன் சேர்ந்து படகு வாயிலாக, அப்பகுதியில் சிக்கித் தவித்தவர்களை மீட்டு நிவாரண முகாமுக்கு அனுப்பினர்.

ஆலத்துார் விழுமலை, தயறாடி மைலம்பாடி, மங்கலம் அணை ஒடம்தோடு, கடப்பாறை, வட்டப்பாறை பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. பாதிப்படைந்த இப்பகுதியில் வசிக்கும் மக்கள், அருகிலுள்ள நிவாரண முகாமுக்கு மாற்றப்பட்டனர்.

பாலக்காடு மாவட்டத்தில் அனைத்து ஆறுகளிலும் மழைவெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், மாவட்டத்திலுள்ள அனைத்து அணைகளிலும் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதனால், சுற்றுலா தலங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் தற்காலிகமாக தடை விதித்துள்ளது.

மூணாறில் கொட்டித்தீர்த்தது மழை


மூணாறில் நேற்று முன்தினம் காலை முதல் பலத்த மழை பெய்த நிலையில், இரவில் தீவிரமடைந்து கொட்டித் தீர்த்தது. நேற்று காலை 8:00 மணிப்படி 24 செ.மீ., பதிவானது.

மூணாறு - உடுமலைபேட்டை ரோட்டில் கன்னிமலை, 8ம் மைல் மற்றும் கொச்சி- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை மூணாறில் பழைய அரசு கல்லுாரி, தேவிகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கேப் ரோடு ஆகிய பகுதிகளில் மண்சரிவும், பள்ளிவாசல் எஸ்டேட் பேக்டரி அருகே நிலச்சரிவும் ஏற்பட்டு மூணாறுக்கு போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் கேப் ரோடு வழியாக தேனிக்கு போக்குவரத்து தடை விதித்து இடுக்கி மாவட்ட நிர்வாகம் நேற்று உத்தரவிட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us