ADDED : ஜூன் 08, 2024 02:49 AM
ஓமலுார்: பெரியார் பல்கலையில், ஊழல் முறைகேடுகள் தொடர்பான ஆவணங்களை அழித்தும், திருத்தியும் வருவதாக பல்கலை தொழிலாளர் சங்கத்தினர், உயர் கல்வித் துறை அரசு முதன்மை செயலருக்கு புகார் கடிதம் அனுப்பி உள்ளனர்.
இதுகுறித்து, சேலம் பெரியார் பல்கலை தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் சக்திவேல், உயர்கல்வித்துறை அரசு முதன்மை செயலருக்கு, நேற்று முன்தினம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
சேலம், பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன், மாஜி பதிவாளர் தங்கவேல் ஆகியோர் கூட்டு சேர்ந்து ஊழல், முறைகேடு, விதிமீறல்களில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில் தமிழக அரசு பழனிசாமி ஐ.ஏ.எஸ்., தலைமையில் விசாரணை குழு அமைத்தது. விரிவான விசாரணைக்கு பின், துணைவேந்தர் ஜெகநாதன், மாஜி பதிவாளர் தங்கவேல், தமிழ்துறை தலைவர் பெரியசாமி ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக, ஆதாரங்களுடன் அறிக்கையை அளித்தனர். ஆனால் மூவர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசால் அனுப்பி வைக்கப்பட்ட அந்த அறிக்கை விவரங்கள், ஆட்சி குழுவின் கவனத்திற்கு கொண்டு வரப்படவில்லை. இது முழுக்க, முழுக்க துணைவேந்தரின் அதிகார மீறலாகும்.
குற்றச்சாட்டு நிரூபணமான மாஜி பதிவாளர் தங்கவேலுவை பணியிடை நீக்கம் செய்யாமல், துணைவேந்தர் அவருக்கு பணி ஓய்வு வழங்கி, தற்போது ஓய்வு ஊதிய பலன்களையும் வழங்க உத்தரவிட்டுள்ளார். இது முழுக்க முழுக்க விதி மீறலாகும். துணைவேந்தர் ஜெகநாதன் இம்மாத இறுதியில் ஓய்வு பெறும் நிலையில், கடந்த இரு வாரங்களாக துணைவேந்தர் குடியிருப்பில், மாஜி பதிவாளர் தங்கவேல், நிர்வாக பணியாளர்கள் விஷ்ணு மூர்த்தி, துரை லிங்கம் ஆகியோருடன் இணைந்து, அவர்களின் ஊழல் முறைகேடுகள் தொடர்பான கோப்புகளை அழித்து வருவதாகவும், திருத்தி வருவதாகவும் தெரிகிறது.
மேலும், ஊழல் முறைகேட்டை வெளிப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, துணைவேந்தர் வீட்டில் இரவு பகலாக பணிகள் நடந்து வருவதாக அறிகிறோம். இது போன்ற நடவடிக்கையை, ஆட்சிக்குழு தடுத்து நிறுத்த வேண்டும். 20 நாட்களில் பணி ஓய்வு பெற உள்ள துணைவேந்தர் ஜெகநாதன், எவ்வித கொள்கை முடிவுகளையும் எடுக்கக்கூடாது என்பதை, ஆட்சிக்குழு அவருக்கு அறிவுறுத்த வேண்டும். மேலும் துணைவேந்தர் ஜெகநாதனுக்கு பணி நீட்டிப்பு வழங்கக் கூடாது. இது தொடர்பாக பல்கலை வேந்தருக்கு கடிதம் எழுத வேண்டும்,
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.