/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஒற்றுமையாக செயல்பட்டால் தேர்தலில் வெற்றி தி.மு.க., நிர்வாகிகளுக்கு முதல்வர் 'அட்வைஸ்' ஒற்றுமையாக செயல்பட்டால் தேர்தலில் வெற்றி தி.மு.க., நிர்வாகிகளுக்கு முதல்வர் 'அட்வைஸ்'
ஒற்றுமையாக செயல்பட்டால் தேர்தலில் வெற்றி தி.மு.க., நிர்வாகிகளுக்கு முதல்வர் 'அட்வைஸ்'
ஒற்றுமையாக செயல்பட்டால் தேர்தலில் வெற்றி தி.மு.க., நிர்வாகிகளுக்கு முதல்வர் 'அட்வைஸ்'
ஒற்றுமையாக செயல்பட்டால் தேர்தலில் வெற்றி தி.மு.க., நிர்வாகிகளுக்கு முதல்வர் 'அட்வைஸ்'
ADDED : ஜூன் 12, 2025 02:05 AM
மேட்டூர், ஜூன் 12
''கோஷ்டி பூசல் இன்றி ஒற்றுமையாக செயல்பட்டால் மட்டுமே தேர்தலில் வெற்றி என்ற இலக்கை எட்ட முடியும்,'' என, முதல்வர் ஸ்டாலின், கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
முதல்வர் ஸ்டாலின் நேற்று இரவு, 8:00 மணிக்கு, சேலம் மாவட்ட எல்லையில் உள்ள பெரும்பள்ளம் பகுதிக்கு வந்தார். அவருடன் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் வந்தார். மாவட்ட செயலர்கள் சிவலிங்கம், செல்வகணபதி வரவேற்றனர். தொடர்ந்து, சேலம் ஒருங்கிணைந்த தி.மு.க., சார்பில், தங்க நிற செங்கோல் வழங்கப்பட்டது. அங்கிருந்து கொளத்துார், நவப்பட்டி ஊராட்சியில் உள்ள திருமண மண்டபத்துக்கு நடந்தும், பின் வேனில் இருந்து சாலை இருபுறமும் நின்றிருந்த மக்களிடமும், மனுக்கள் வாங்கி குறைகளை கேட்டார்.
இரவு, 8:30 மணிக்கு நவப்பட்டி மண்டபத்தில் நடந்த கூட்டத்தில், சேலம் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் உள்ள, தி.மு.க., மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், நகர, ஒன்றிய, டவுன் பஞ்சாயத்து செயலர்கள், 240 பேர் பங்கேற்றனர்.
அதில் ஸ்டாலின் பேசுகையில், ''சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட தொண்டர்கள் பல்வேறு கோஷ்டிகளாக பிரிந்து செயல்படுகின்றனர். கட்சி நலன் கருதி நிர்வாகிகள், தொண்டர்கள் கோஷ்டி பூசல் இன்றி ஒற்றுமையாக செயல்பட்டால் மட்டுமே தேர்தலில் வெற்றி என்ற இலக்கை எட்ட முடியும்,'' என்றார்.
முன்னதாக ஸ்டாலின் வேன், மண்டபத்துக்குள் சென்றதும், நுழைவாயில் கதவுகள் மூடப்பட்டன. கட்சி நிர்வாகிகளின் வாகனங்கள் கூட அனுமதிக்கப்படவில்லை. இரவு, 9:50 மணிக்கு பின், மண்டபத்தில் இருந்து புறப்பட்டார். மேலும் நிர்வாகிகளுக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் கிரேவி, மீன் வறுவல் பரிமாறப்பட்டன. காவேரிகிராஸ், மாதையன்குட்டையில் நடந்து சென்று மக்களின் குறைகளை கேட்டு, மனுக்களை வாங்கி கொண்ட முதல்வர், நீர்வளத்துறை ஆய்வு மாளிகைக்கு சென்று தங்கினார்.