/உள்ளூர் செய்திகள்/சேலம்/கருட வாகனங்களில் 7 பெருமாள் மாசி மக திருவிழா கோலாகலம்கருட வாகனங்களில் 7 பெருமாள் மாசி மக திருவிழா கோலாகலம்
கருட வாகனங்களில் 7 பெருமாள் மாசி மக திருவிழா கோலாகலம்
கருட வாகனங்களில் 7 பெருமாள் மாசி மக திருவிழா கோலாகலம்
கருட வாகனங்களில் 7 பெருமாள் மாசி மக திருவிழா கோலாகலம்
ADDED : பிப் 25, 2024 03:38 AM
சேலம்: மாசி மக திருவிழாவையொட்டி, ஸ்ரீவாரி பஞ்ச கருட சேவை குழு சார்பில், 9ம் ஆண்டாக நேற்று, சேலம் பட்டைக்கோவில் அருகே ஒரே இடத்தில், 7 கோவில்களில் இருந்து பெருமாள் சுவாமிகள், கருட வாகனங்களில் சப்த கருட சேவையாக காட்சியளித்தனர்.
முன்னதாக, பட்டைக்கோவில் வரதராஜர், கிருஷ்ணன் கோவில் கிருஷ்ணர், அம்மாபேட்டை சவுந்தரராஜர், அசோக் நகர் லட்சுமி வெங்கடேசர், கிருஷ்ணா நகர் சீதா ராமச்சந்திர மூர்த்தி, எருமாபாளையம் ராமானுஜர் மணிமண்டப ரங்கநாதர், பொன்னம்மாபேட்டை ஆஞ்சநேயர் கோவில்களின் பெருமாள் சுவாமிகள், ஊர்வலமாக வந்து சேவை ஸாதித்தனர். அங்கு அனைத்து பெருமாள்களுக்கும் ஒரே நேரத்தில் மண்டகப்படி சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அவர்களுக்கு துளசி, தீர்த்த பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டன.
தேரோட்டம்
மாசி மக பவுர்ணமியை முன்னிட்டு சேலம் மாவட்டம் மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவிலில் நேற்று பெரிய தேரோட்டம் நடந்தது. மாலை, 4:40 மணிக்கு, விநாயகர் தேர் முன் செல்ல பின்னால் பத்ரகாளியம்மன் பெரிய தேரை, ஏராளமான பக்தர்கள் இழுத்துச்சென்றனர். மாலை, 6:40 மணிக்கு, கிராம சாவடியை தேர் அடைந்தது. இதில் செயல் அலுவலர் திருநாவுகரசர், மேட்டூர் டி.எஸ்.பி., மரியமுத்து, எம்.எல்.ஏ., சதாசிவம், பல்வேறு கட்சியினர் பங்கேற்றனர். அங்கு நிறுத்தப்பட்ட தேர், இன்று மதியம், 3:00 மணிக்கு மீண்டும் பக்தர்களால் இழுக்கப்பட்டு, நிலையத்தை அடையும்.
சிதம்பரேஸ்வரர்
பனமரத்துப்பட்டி, ச.ஆ., பெரமனுார் ஊராட்சி நத்தமேட்டில் உள்ள சிதம்பரேஸ்வரர் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. திரளான பக்தர்கள் வடம் பிடித்து, ஊரின் முக்கிய வீதிகள் வழியே தேரை இழுத்துச்சென்றனர். வழி நெடுக, மக்கள், தேங்காய், பழம், தாம்பூலம் கொடுத்து வரவேற்று வழிபட்டனர்.