Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ காற்று, மழை: விளம்பர பதாகை விழுந்து பயணி காயம்

காற்று, மழை: விளம்பர பதாகை விழுந்து பயணி காயம்

காற்று, மழை: விளம்பர பதாகை விழுந்து பயணி காயம்

காற்று, மழை: விளம்பர பதாகை விழுந்து பயணி காயம்

ADDED : ஜூன் 11, 2024 05:47 AM


Google News
ஆத்துார் : ஆத்துார் புது பஸ் ஸ்டாண்டில் இரு ஓட்டல் உள்பட, 82 வணிக வளாக கடைகள் உள்ளன. அந்த கடைகளின் மேற்புற பகுதிகளில் இரும்பு கம்பிகளுடன் தனியார் நிறுவனங்களின் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

நேற்று மதியம், 3:30 மணிக்கு சூறாவளி காற்றுடன் சாரல் மழை பெய்தது. பின் சேலத்தை சேர்ந்த ராஜேந்திரன், 60, என்பவர், சேலம் செல்லும் பஸ் நிற்கும் இடத்தில் போட்டுள்ள இருக்கையில் அமர்ந்திருந்தார். அப்போது வணிக வளாக கடை மேற்புற பகுதியில் இருந்த, தனியார் நிறுவன விளம்பர பதாகை, ராஜேந்திரன் மீது விழுந்தது. லேசான காயமடைந்த அவரை, உறவினர்கள், தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.

இதனால் வணிக வளாக கடை மேற்புற பகுதிகளில் ஆபத்தான நிலையில் உள்ள பேனர்களை அகற்ற, பயணியர் வலியுறுத்தினர். இதுகுறித்து ஆத்துார் நகராட்சி கமிஷனர் சையது முஸ்தபாகமால் கூறுகையில், 'ஆபத்தான, பிடிமானம் இல்லாத பேனர்கள் குறித்து ஆய்வு செய்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.பேனர்கள் சேதம்

ஓமலுார் நகர் பகுதியில் நேற்று மதியம் வரை வெயில் சுட்டெரித்தது. ஆனால் மதியம், 2:30 மணிக்கு பலத்த காற்றுடன் மழை கொட்டியது. அரை மணி நேர மழையால் கடை வீதி, செவ்வாய் சந்தை, பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. அதேபோல் மேச்சேரி, பஞ்சுகாளிப்பட்டி பகுதிகளில் பலத்த காற்று வீசியதில், சில இடங்களில் விளம்பர பேனர்கள் கிழிந்து சேதமாகின. ஓமலுார் பஸ் ஸ்டாண்ட் அருகே, ஒரு பேனர் கிழிந்து தொங்கியது. பின் காற்றின் வேகம் குறைந்த பின், சாரல் மழை தொடர்ந்து பெய்தது. மேலும் பகலில் ஏற்பட்ட வெப்பம் தணிந்தது.

அதேபோல் வாழப்பாடி, மேட்டுப்பட்டி, ஏத்தாப்பூர், புழுதிக்குட்டை, சோமம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம், 3:30 மணி முதல், 4:00 மணி வரை மழை பெய்தது.

சந்தை வியாபாரிகள் அவதி

பனமரத்துப்பட்டி, சந்தைப்பேட்டையில் திங்கள்தோறும் வாரச்சந்தை கூடுகிறது. அங்கு தரையில் காய்கறி, பழங்கள், கீரைகளை வைத்து விவசாயிகள், வியாபாரிகள் விற்கின்றனர். நேற்று மாலை, 4:00 மணிக்கு மழை பெய்ததால், அங்கு தண்ணீர் தேங்கி காய்கறி, பழங்கள், கீரைகள் மிதந்தன. சந்தைப்பேட்டை பகுதி சேறு, சகதியாக மாறியது. மழையில் நனைந்தபடி விவசாயிகள், வியாபாரிகள் விற்பனையில் ஈடுபட்டனர். மாலை, 5:30 மணி வரை மழை விட்டு, விட்டு பெய்ததால் மக்களும் சிரமத்துக்கு ஆளாகினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us