/உள்ளூர் செய்திகள்/சேலம்/ வெப்பம் தணிந்து மழையால் மக்கள் மகிழ்ச்சி வெப்பம் தணிந்து மழையால் மக்கள் மகிழ்ச்சி
வெப்பம் தணிந்து மழையால் மக்கள் மகிழ்ச்சி
வெப்பம் தணிந்து மழையால் மக்கள் மகிழ்ச்சி
வெப்பம் தணிந்து மழையால் மக்கள் மகிழ்ச்சி
ADDED : மார் 12, 2025 08:49 AM

சேலம்: சேலத்தில் மார்ச் தொடக்கம் முதலே, நாளுக்கு நாள் வெயில் தாக்கம் அதிகரித்து, 100 டிகிரிக்கு மேல் சுட்டெரித்தது. ஆனால் நேற்று காலை முதல், வானம் மேகமூட்டத்துடன், அவ்வப்போது சூரியன் எட்டிப்பார்த்து கண்ணாமூச்சி காட்டிக்கொண்டிருந்தது. மதியம், 1:00 மணிக்கு மேல் நகரின் பல பகுதிகளில் குளிர் காற்றுடன் சாரல் மழை பெய்தது. இதமான சீதோஷ்ண சூழல் நிலவியதால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் ரசித்தபடி சென்றனர்.
அதேபோல் வாழப் பாடி, பெத்தநாயக்கன்பாளையம், அயோத்தியாப்பட்டணம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில், சில மாதங்களுக்கு பின் நேற்று மதியம் பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. வாழப்பாடியில் உளுந்துார்பேட்டை - தம்மம்பட்டி நெடுஞ்சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. குளிர்ந்த சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மழையால் மதியம், 1:40 முதல், 4:10 மணி வரை மின்தடை ஏற்பட்டது.
ஆத்துார் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், இரு மாதங்களாக வெயில் தாக்கம் அதிகம் இருந்தது. சில நாட்களாக சுட்டெரித்த வெயிலால் மக்கள் சிரமப்பட்டனர். நேற்று மதியம், 2:30 முதல், 3:30 மணி வரை, தலைவாசலில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ததது. ஆத்துார், கெங்கவல்லி, தம்மம்பட்டி, நரசிங்கபுரம் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை கொட்டியது. தொடர்ந்து மாலை, 4:30 முதல், 5:30 மணி வரை கனமழையாக பெய்தது. ராணிப்பேட்டை சாலையில் குளம்போல் மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். கோடை வெப்பம் தணிந்ததால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஏற்காட்டில் 'குளுகுளு'
ஏற்காட்டில் சில வாரங்களாக வெயில் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. ஆனால் நேற்று காலை முதல், வெயில் தாக்கம் குறைந்து, ஏற்காடு, அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பனிமூட்டம் ஏற்பட்டு, கடுங்குளிர் நிலவியது. 5 அடி துாரத்தில் இருப்பது கூட தெரியாததால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி, மெதுவாக சென்றனர். உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தற்போது அரசு பொதுத்தேர்வு நடந்து வருவதால், குறைந்த அளவிலேயே சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். நேற்று கணிசமான அளிவில் வந்த சுற்றுலா பயணியர், பனிப்பொழிவு, குளிரை பொருட்படுத்தாமல், 'குளுகுளு' என மாறிய ஏற்காட்டை சுற்றிப்பார்த்து மகிழ்ந்தனர். மதியம் மித மழை பெய்தது.