ADDED : ஜூன் 12, 2024 02:36 AM
மேச்சேரி:சேலம் மாவட்டம் மேச்சேரி, வெள்ளாறு ஊராட்சி அரசமரத்துார் காட்டுவளவை சேர்ந்த விவசாயி ராமஜெயம், 35. இவரது கன்றுக்குட்டியை கடந்த, 22 இரவு, ஒரு மர்ம விலங்கு கடித்து கொன்றது.
அந்த விலங்கை கண்டுபிடிக்க, டேனிஷ்பேட்டை வனத்துறையினர், 24ல் அப்பகுதியில், 6 இடங்களில் கேமராக்களை பொருத்தியும், டிரோன் மூலம் கண்காணித்தும் பலனில்லை.
ஆனால், 29ல் பசு மாட்டின் கழுத்தை கடித்து கொல்ல முயன்றது. சத்தம் கேட்டு விவசாயிகள் கூடியதால், அங்கிருந்து மர்ம விலங்கு தப்பியது.
விலங்கை பிடிக்க, வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கேமரா பொருத்தி, இரு வாரங்களுக்கு மேலான நிலையில் இதுவரை மர்ம விலங்கு நடமாட்டம் கேமராவில் பதிவாகவில்லை.
இருப்பினும் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.