ADDED : ஜன 07, 2024 04:09 AM
கமுதி: கமுதியில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை வாரச்சந்தை நடக்கிறது. இங்கு கடைகள், அடிப்படை வசதி இல்லாததால் வியாபாரிகள் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து புதிதாக கடை கட்டுவதற்கு வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 140 கடைகள் கட்டுவதற்கு ரூ.1.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. புதிதாக கடைகள் கட்டும் பணி நடைபெற்று வந்தது.பணியை அவ்வப்போது பேரூராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர். வாரச்சந்தை அருகே தற்காலிகமாக வியாபாரிகள் கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிதாக வாரச்சந்தை கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை கட்டடங்கள் திறக்கப்படாமல் காட்சிப்பொருளாக உள்ளது. இது குறித்து தினமலர் நாளிதழில் பலமுறை செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக கமுதி புதிய வாரச்சந்தை கட்டடத்தை சென்னையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். கமுதியில் பேரூராட்சி தலைவர் அப்துல் வஹாப் சகாராணி தலைமை வகித்தார். துணைதலைவர் அந்தோணி சவேரியார் அடிமை, செயல் அலுவலர் இளவரசி முன்னிலை வகித்தனர். குத்துவிளக்கு ஏற்றினர். உடன் கவுன்சிலர்கள் போஸ் செல்வா, பொன்னுச்சாமி உட்பட பலர் இருந்தனர்.