ADDED : ஜன 07, 2024 02:09 AM
பரமக்குடி:ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் நீதிமன்றம் அருகே ஆறு பேரை வெறிநாய் கடித்து குதறியதால் மக்கள் அலறி ஓடினர். நேற்று ஒரே நாளில், 15 பேரை நாய்கள் கடித்ததால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
பரமக்குடி நகராட்சியில் ஒவ்வொரு தெருவிலும், 10க்கும் மேற்பட்ட நாய்கள் உள்ளன. சில ஆண்டுகளாக நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்யாததால் பன்மடங்கு அதிகரித்துள்ளன.
மேலும் குட்டிப்போட்ட நாய்கள் மற்ற பகுதிகளில் இருந்து வருவோரை விரட்டி கடிக்கின்றன. பல நாய்கள் பராமரிப்பின்றி தோல் உரிந்து, புண்கள் ஏற்பட்டு நோய் பரப்புவதாக திரிகின்றன.
நகரில் தினமும் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்டோர், நாய் கடியால் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.
நேற்று ஒரே நாளில் மட்டும் பள்ளி குழந்தைகள் உட்பட பலர் நாய் கடியால் பாதிக்கப்பட்டு 15க்கும் மேற்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.