Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/தேவிபட்டினம், சேதுக்கரையில் குவிந்த பக்தர்கள் புனித நீராடினர்: தை அமாவாசையில் தர்ப்பணம் செய்து வழிபாடு

தேவிபட்டினம், சேதுக்கரையில் குவிந்த பக்தர்கள் புனித நீராடினர்: தை அமாவாசையில் தர்ப்பணம் செய்து வழிபாடு

தேவிபட்டினம், சேதுக்கரையில் குவிந்த பக்தர்கள் புனித நீராடினர்: தை அமாவாசையில் தர்ப்பணம் செய்து வழிபாடு

தேவிபட்டினம், சேதுக்கரையில் குவிந்த பக்தர்கள் புனித நீராடினர்: தை அமாவாசையில் தர்ப்பணம் செய்து வழிபாடு

ADDED : பிப் 10, 2024 04:35 AM


Google News
Latest Tamil News
தேவிபட்டினம்: தேவிபட்டினம் நவபாஷாணம், சேதுக்கரை கடலில் தை அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

தேவிபட்டினத்தில் பிரசித்தி பெற்ற நவபாஷாண நவக்கிரக கோயில் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு தோஷ நிவர்த்தி வேண்டியும், முன்னோர்களுக்கும் தர்ப்பணம் செய்யவும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். நேற்று தை அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நவபாஷாண கடற்கரையில் குவிந்தனர்.

பக்தர்கள் நவக்கிரகங்கள் அமைந்துள்ள கடல் பகுதியில் புனித நீராடி நவக்கிரகங்களை சுற்றி வந்து வழிபாடு செய்தனர். பின் முன்னோர்களுக்கு எள் பிண்டம் கரைத்து தர்ப்பணம் செய்தனர்.

*திருப்புல்லாணி அருகே சேதுக்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். நேற்று அதிகாலை 4:00 மணி முதல் தொடர்ந்து பக்தர்கள் குவிந்தனர். முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம், பித்ரு கடன் உள்ளிட்ட சங்கல்ப பூஜைகளை புரோகிதர்கள் மூலம் நிறைவேற்றினர்.

பின் சேதுக்கரை கடலில் புனித நீராடி அங்குள்ள சேது பந்தன ஜெயவீர ஆஞ்சநேயர் கோயிலில் நீண்ட வரிசையில் தேங்காய் உடைத்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் நெய் தீபமேற்றி வழிபாடு செய்தனர்.

சேதுக்கரை அருகே சின்னக்கோவில் வெள்ளைப் பிள்ளையார், தமிழ் மாமுனிவர் அகத்தியருக்கு பூஜை செய்து வழிபாடு செய்தனர். மூலவர்கள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

* திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர். பசுக்களுக்கு பச்சரிசி, வெல்லம், அகத்திக்கீரை உணவாக கொடுத்தனர். காகங்களுக்கு அன்னமிட்டனர்.

தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்பட்டன. திருப்புல்லாணி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

*தொண்டி அருகே தீர்த்தாண்டதானத்தில் சகலதீர்த்தமுடையவர் கோயில் உள்ளது. சீதையை மீட்க ராமபிரான் இவ்வழியே சென்ற போது இங்கு தங்கினார். அப்போது அவருக்கு தாகம் எடுக்கவே அகத்தியர் தீர்த்தம் ஏற்படுத்தி கொடுத்ததால் தீர்த்தாண்டதானம் என்ற பெயர் ஏற்பட்டதாக வரலாறு உள்ளது.

அமாவாசை நாட்களில் பக்தர்கள் அங்குள்ள கடலில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம். நேற்று தை அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் புனித நீராடி சகலதீர்த்தமுடையவர், சவுந்தரநாயகி அம்மனை சுவாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து சுவாமி ஊர்வலம், அன்னதானம் நடந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us