ADDED : மார் 13, 2025 04:51 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் 2 நாட்களாக மழை பெய்து வருவதால் பட்டணம்காத்தான் ஊராட்சி அம்மா பூங்கா அருகே வாரச்சந்தை வளாகத்தில் மழைநீர் தேங்கியதால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண ஊராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.
ராமநாதபுரத்தில் 2வது நாளாக நேற்று காலை கனமழை பெய்தது. இதன் காரணமாக கலெக்டர் அலுவலக வளாகம் ெஹலிபேடு மைதானம் அருகே மரம் வேருடன் சாய்ந்து விழுந்தது. ரயில்வே பீடர் ரோடு பாலத்தின் கீழ் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.
பட்டணம்காத்தான் டி-பிளாக் ரோடு அம்மா பூங்கா அருகே வாரச்சந்தைக்கு ஒதுக்கிய இடம் தாழ்வாக உள்ளதால் தண்ணீர் தேங்கியதால் ரோட்டில் வியாபாரம் நடந்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வேகமாக வாகனங்கள் வரும் போது கவனக்குறைவால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள், பொதுமக்கள் அச்சம் தெரிவித்தனர்.
ரூ.பல ஆயிரம் வாடகை வசூல் செய்யும் பட்டணம்காத்தான் ஊராட்சி நிர்வாகம் சந்தைக்கு ஒதுக்கிய இடத்தில் தேங்கிய தண்ணீரை அகற்றி அந்த பள்ளத்தை மண்கொட்டி மேடாக்க வேண்டும். அதற்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும்.